×

லடாக் எல்லை விவகாரத்தில் விளைவுகளை உணர்ந்து பேச வேண்டும்: மோடிக்கு மன்மோகன் அறிவுரை

புதுடில்லி: ‘லடாக் எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி விளைவுகளையும், நாட்டின் பாதுகாப்பையும் உணர்ந்து வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்,’ என காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் அறிவுரை கூறி உள்ளார். லடாக் எல்லையில் இந்திய, சீன படைகளுக்கு இடையேயான மோதல் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘எல்லையில் எந்த ஊடுருவலும் நடக்கவில்லை, இந்திய நிலைகளை சீனா கைப்பற்றவும் இல்லை,’ என்பது போல் பேசினார். இது கடும் சர்ச்சையானது. ‘ஊடுருவல் நடக்கவில்லை என்றால், மோதல் நடந்த சமயத்தில் உண்மையில் நடந்தது என்ன?’ என காங்கிரஸ் கேள்வி கேட்டு வருகிறது.

இந்நிலையில், லடாக் விவகாரத்தில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாம் ஒரே தேசமாக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய நேரம் இது. நாம் ஒற்றுமையுடன் இருந்து சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஒருசேர பதிலடி தர வேண்டும். சில வரலாற்று முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் நாடு உள்ளது. இதில் அரசின் முடிவுகளும், செயல்பாடுகளும், எதிர்கால சந்ததியினர் நம்மை எவ்வாறு உணரப் போகிறார்கள் என்பதில் அதிக தாக்கத்தை கொண்டிருக்கக் கூடியவை.

எனவே, நம்மை வழிநடத்தும் பதவியில் இருப்பவருக்கு மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் இருக்கிறது. பிரதமர் அலுவலகத்தின் மூலம் நமது ஜனநாயகமும், கடமையும் சோதனைக்கு உட்படுத்தப்படும் காலம் இது. இத்தகைய தருணத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தும் வார்த்தைகளும், அறிவிப்புகளும், பிராந்திய நலனிலும் தேச பாதுகாப்பிலும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து பேச வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்று வரை பல ஊடுருவல்கள் மூலம் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பான்காங் சோ ஏரி போன்ற இந்திய பகுதிகளை சீனா உரிமை கோர முயல்கிறது. சீனாவின் அச்சுறுத்தலுக்கு நாம் பணிந்துவிட கூடாது,

சீனா தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்ளும் வார்த்தையைப் பயன்படுத்த பிரதமர் மோடி அனுமதிக்கக் கூடாது. சீனாவின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய எல்லையை பாதுகாப்பதற்காக நமது வீரர்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
அவர்களின் உயிர் தியாகத்துக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும். அதில் ஏற்படும் சிறிதளவு குறை கூட மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் வரலாற்று துரோகமாகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்திய-சீன ராணுவம் 2ம் கட்ட பேச்சுவார்த்தை
லடாக் மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து, இந்திய- சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதை சீர் செய்ய, இரு நாட்டு ராணுவ லெப்டினென்ட் ஜெனரல்கள் மட்டத்திலான உயர் அதிகாரிகள் 2ம் கட்டமாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 6ம் தேதி நடந்தது. அப்போது, பேச்சுவார்த்தை மூலம் எல்லை விவகாரத்தை சுமூகமாக முடிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில்தான், கடந்த 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இரு படைகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பலி குறித்து சீனா ‘மூச்’
லடாக் மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 45 பேரும்் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால், சீன ராணுவம் இதை உறுதி செய்ய மறுத்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் ராணுவ தளபதியும் மத்திய அமைச்சருமான வி.கே.சிங், சீன ராணுவத்தில் 40 வீரர்கள் பலியானதாக கூறியிருந்தார். இது குறித்து சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லிஜியனிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அதைப் பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது,’’ என்று கூறி விட்டார்.

தாரை வார்த்தது நீங்கள் பா.ஜனதா காரசார பதிலடி
மன்மோகன் சிங் கருத்து குறித்து பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது டிவிட்டர் பதிவில், ‘காங்கிரசும், அதன் மூத்த தலைவர்களும் மீண்டும் மீண்டும் இந்திய படையினரை அவமதிப்பதையும், அவர்களின் வீரத்தை சந்தேகிப்பதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இதுபோன்ற சமயத்திலாவது தேச ஒருமைப்பாடு என்றால் என்ன என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் 43,000 கிமீ இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் தாரை வார்த்து சரணடைந்தார். 2010 முதல் 2013 வரை 600 ஊடுருவல் சம்பவங்கள் நடந்தன.

எதற்கும் ஐமு கூட்டணி அரசு துளியும் எதிர்த்து சண்டை போடாமல் சரணாகதி அடைந்தது.  எனவே, மன்மோகனின் அறிக்கை வெறும் சொல் அலங்காரம்தான். பிரதமர் மோடியை இந்த தேசம் முழுமையாக நம்புகிறது, ஆதரவளிக்கிறது. பல சோதனைமிகு காலங்களில் நாட்டின் நலனுக்காக முடிவுகளை எடுக்கும் பிரதமர் மோடியின் நிர்வாக திறமையை 130 கோடி இந்தியர்களும் உணர்ந்துள்ளனர்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Manmohan Singh ,Ladakh ,Modi The Ladakh ,Modi , Ladakh border, Modi, Manmohan, Advice
× RELATED மோடி தள்ளுபடி செய்தது விவசாயிகளின்...