×

ஆலங்குளம் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் சாலையோர தடுப்பு

சிவகாசி: வெம்பக்கோட்டை-ஆலங்குளம் சாலையில் கன்டியாபுரம் அருகே சாலை ஓரத்தில் உள்ள இரும்பு தடுப்புகளில் பாதுகாப்பு எச்சரிக்கை ஸ்டிக்கர் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர். வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, திருவேங்கடம் போன்ற ஊர்களில் இருந்து இந்த சாலை வழியாக ஆலங்குளத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை இயங்கி வருவதால் இந்த சாலையில் தினமும் ஏராளமான சரக்கு வாகனங்களும் செல்கின்றன. இது தவிர பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

ஆலங்குளம் செல்லும் சாலையில் பல இடங்களில் சாலை குறுகலாகவும், வளைவுகளாகவும் உள்ளது. இது போன்ற இடங்களில் பாதுகாப்பு கருதி நெடுஞ்சாலை துறையினர் சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர். ஆனால், இந்த தடுப்புகள் உள்ள இடங்களில் போக்குவரத்து எச்சரிக்கை ஸ்டிக்கர் எதுவும் ஒட்டப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை வாகனங்கள் கடந்து செல்லும் போது விபத்தில் சிக்கி வருகின்றன.
வெம்பக்கோட்டை-ஆலங்குளம் இடையிலான சாலையில் கன்டியாபுரம் அருகே சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் முகப்பில் பாதுகாப்பு எச்சரிக்கை ஸ்டிக்கர் இல்லை. மேலும் இரும்பு தடுப்புகளை சுற்றிலும் செடிகள் அடர்ந்து முளைத்துள்ளன. இதனால் இங்கு சாலையோர தடுப்புகள் இருப்பதே தெரியவில்லை. இரவு நேரங்களில் எதிரே வாகனங்கள் வரும் போது விலகி சென்றால் தடுப்பில் மோதி வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. டூவீலர் விபத்து அடிக்கடி நடக்கிறது.

கடந்த சிலமாதங்களுக்கு முன் இங்கு நடந்த டூவீலர் விபத்தில் இரண்டு பர் பலியாகினர். இது போன்று அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, நெடுஞ்சாலை துறையினர் வெம்பக்கோட்டை-ஆலங்குளம் சாலையில் உள்ள சாலையோர தடுப்புகளில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டவும், சாலையோரம் உள்ள செடிகளை அகற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : Roadside Blocking ,Alangulam Road Roadside Blocking ,Alangulam Road , Roadside Blocking, Alangulam Road
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...