×

திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்படும் காய்கறிகள்: சேமிப்பு கிடங்கு இல்லாததால் வியாபாரிகள் வேதனை

திருவள்ளூர்: திருமழிசை தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்க ஆட்கள் இல்லாமல், தினமும் டன் கணக்கான காய்கறிகள் குப்பையில் கொட்டப்படுகின்றன. இதனால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே காய்கறிகள் சேமிப்பு கிடங்கு வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய காய்கறி மார்க்கெட்டான சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை, கடந்த மாதம் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து அரசு, கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிக்கொண்டிருந்த பூ, பழ சந்தைகளை கடந்த மே 11ம் தேதி மாதவரம் புதிய பஸ் நிலையத்திற்கும், காய்கறி மார்க்கெட்டை பூந்தமல்லி அடுத்த திருமழிசைக்கும் மாற்றி அமைத்தது.

நோய்த் தொற்று பரவலை தடுக்கும் விதமாக கோயம்பேட்டிலிருந்து திருமழிசை சாட்டிலைட் டவுன்ஷிப் பகுதியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில், மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் சில்லறை வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். சீசன் நேரம் என்பதால், திருமழிசை மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகமாகியிருக்கிறது. ஆனால், வரத்திற்கேற்ப விற்பனை இல்லை. இதனால் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. முள்ளங்கி, கேரட், கத்திரிக்காய், வெண்டைக்காய் என அனைத்து காய்கறிகளின் விலையும் சந்தையில் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், வாங்க ஆள் இல்லை.

திருவிழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதது, ஓட்டல்கள் அதிக அளவில் காய்கறிகளைக் கொள்முதல் செய்வதில்லை.
இதனால் மொத்த வியாபாரிகளும் குறைந்த அளவில்தான் காய்கறிகளை வாங்குகிறார்கள். இதனால் அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள், டன் கணக்கான காய்கறிகளைத் தினமும் கீழே கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.

மேலும் 128 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் சில ஒன்றியங்கள் என 128 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, 128 பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2534 ஆக உயர்ந்துள்ளது. இதில், 37 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இதுவரை, 1240 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மற்ற 1257 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.


Tags : traders ,Tirumalai ,warehouses ,Tirumalakizhi , Vegetable, Market, Vegetables, Merchants
× RELATED ஆட்டோ- தனியார் பஸ் மோதி பூண்டு வியாபாரிகள் 2 பேர் பலி: போளூரில் பரிதாபம்