×

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி சென்னைவாசிகளை கிராமத்திற்குள் அனுமதிக்காதீங்க...

* தண்டோரா போட்டு எச்சரிக்கை
* சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு
* கண்டனங்கள் குவிந்து வருகிறது

சென்னை: ஒவ்வொரு ஊர் எல்லையிலும் வரவேற்கிறோம் என்பதை தான் பார்த்திருப்போம். தற்ேபாது கொரோனா பாதிப்பு எதிரொலியாக சென்னையில் இருந்து வருபவர்களை கிராமத்தில் அனுமதிக்காதீர்கள் என்று தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாள் தோறும் ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால், சென்னைவாசிகள் கடும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைந்து போய் உள்ளனர். சென்னையில் வாழ்வாதாரத்திற்காக வந்தவர்கள் கூட உயிர் பிழைத்தால் போதும் என்று, இவ்வளவு நாட்கள் வாழ்வு கொடுத்த மண்ணை விட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதுவரை சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையை விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையை விட்டு பிரிய மனம் இல்லாமல் தான் ஒவ்வொருவரும் சொந்த ஊர் சென்றுள்ளனர். சென்னையை விட்டு சென்றாலும் சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைய வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.

இருந்த போதிலும் சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் கொரோ வைரஸின் வீரியம் குறைந்தபாடில்லை. மேலும், மேலும் அதிகரிக்க தான் செய்து வருகிறது. இதனால், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் கடந்த 19ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியேறினால் அவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்து வருகிறது.

சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு அவ்வளவு எளிதில் இ-பாஸ் கிடைப்பது இல்லை. அப்படி இ-பாஸ் மூலம் சென்றாலும் அவர்கள் பல்வேறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவ அறிக்கை வந்தால் தான் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும். அதுவரை அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்லூரிகளில் தான் தங்க வேண்டும். இவ்வளவையும் தாண்டி தான் ஒருவர் சொந்த ஊருக்கு சென்றாக வேண்டும்.

இந்த நிலையில் தற்போது சென்னையில் இருந்து வருபவர்களை ஊருக்குள் அனுமதிக்க கூடாது என்று தண்டோர மூலம் அறிவிப்பு செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டோரா அடிப்பவர் பேசும் காட்சி வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவில், “ சென்னையில்கொரோனா வைரஸ் அதிகமாக பரவியுள்ளதால், கிராம பொது மக்கள் அனைவரும் சென்னையில் இருந்து வருபவர்களை யாரும் அனுமதிக்க கூடாது. மீறி அனுமதித்தால் கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது கலெக்டர் உத்தரவு” என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லையிலும், “அந்தந்த மாவட்டத்தின் பெயரை போட்டு உங்களை அன்புடன் வரவேற்கிறேது” என்று தான் போர்டு வைக்கப்பட்டிருக்கும். காலம் காலமாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. தற்போது சென்னையில் இருந்து வருபவர்களை கிராமத்திற்குள் வீடாதீர்கள் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

சென்னை மக்கள் குமுறல்
வீடியோ பதிவு சென்னைவாசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். அதில், “ தமிழகத்தின் தலைநகர் சென்னை என்பதால் இங்கு நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து போகின்றனர். எந்த மாவட்டத்தில் இருந்தும், எந்த மாநிலத்தில் இருந்தும் வந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பூமியாக சென்னை திகழ்கிறது. யார் வந்தாலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்று வருகிறது. பிழைக்க வழியில்லாதவர்கள் கூட சென்னைக்கு வந்தால் பிழைத்து கொள்ளலாம் என்ற வரலாறும் சென்னைக்கு உண்டு. கடுமையான மழை, புயல், வெள்ளத்துக்கு கூட சென்னைவாசிகள் பயப்படவில்ைல. தைரியமாக எதிர்கொண்டனர்.

போதாத காலம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு விட்டது. மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எங்கே தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்த நோய் பரவிவிடக்கூடாது என்பதற்காக தான் அவர்கள் சொந்த ஊர்களுக்கு மனமில்லாமல் போய் உள்ளனர். அப்படி வருபவர்களை ஊருக்கு உள்ளே விடக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. இவர்கள் என்ன வெளிநாட்டுக்கா போகிறார்கள். தமிழகத்திற்கு உள்ள ஒரு மாவட்டத்துக்கு  தானே செல்கிறார்கள். இதில் அவர்களை அனுமதிப்பதில் ஏன் பாரப்பட்சம் காட்ட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Tags : Corona, echo, Madras
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...