மகளின் காதல் திருமணத்திற்கு உதவியவர் கொலை வழக்கில் தேடப்படும் அதிமுக செயலாளர் பதவி பறிப்பு

சென்னை: மகளின் காதல் திருமணத்திற்கு உதவியவர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் திருமங்கலம் அதிமுக நகர செயலாளர் விஜயன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம், அதிமுக நகர செயலாளர் விஜயன். கடந்த 10 ஆண்டுக்கு மேலாக நகர செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி உமா கடந்த முறை திருமங்கலம் நகராட்சி தலைவராக இருந்தவர். விஜயன் நகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். மதுரை மாவட்டத்தில் அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருந்து வந்தார். இவரது மகள் கடந்த ஓராண்டிற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இது விஜயனுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதனால் மகளின் காதல் திருமணத்திற்கு உதவியவர்களுக்கு, விஜயன் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இவர் விஜயன் மகளின் காதலுக்கு உதவியவர் என்பதால் கொலை செய்யப்பட்டதாக கூறி, மணிகண்டனின் உறவினர்கள், குடும்பத்தினர் மதுரை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக நகர செயலாளர் விஜயன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இந்த தகவல் அதிமுக தலைமையை எட்டியதும் விஜயன், திருமங்கலம் நகரசெயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக ஓபிஎஸ், இபிஎஸ் நேற்று முன்தினம் அறிவித்தனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த திருமங்கலம் அதிமுக நகர செயலாளர் பதவியை விஜயன் இழந்தார். இது நகர அதிமுகவினருக்கும், விஜயனின் ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Related Stories:

>