×

கொரோனாவால் திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி 30 ஆயிரம் தையல், கார்மென்ட்ஸ் தொழிலாளர்கள் பரிதவிப்பு

* 5 கோடி ரெடிமேட் ஆடைகள் தேக்கம்
* வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக வேதனை

திருப்பத்தூர்: கொரோனாவால் திருப்பத்தூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் தையல் மற்றும் கார்மென்ட்ஸ் தொழிலாளர்கள் பரிதவித்து வருகின்றனர். சுமார் 5 கோடி ரெடிமேட் ஆடைகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதனால் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.உலகையே உலுக்கி வந்த கொரானா வைரஸ் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 82 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 39 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். 4.40 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.இந்தியாவை பொறுத்தவரையில் 3.56 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.92 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதில் 12 ஆயிரத்து 183 பேர் வரை பலியாகியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இப்படி ஒருபுறம் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம் அத்தியாவசிய தேவை உள்ள சில ெதாழில்களை தவிர மற்ற அனைத்து விதமான தொழில்களும் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளின்றி தவித்து வருகின்றனர்.அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்திலும் பல்வேறு தொழில்கள் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. அதில் தையல் தொழில், கார்மென்ட்ஸ் தொழில் செய்யும் தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது. இங்கு பிரதான தொழிலாக விவசாயத்தை நம்பி இருந்த மக்கள் வறட்சி காரணமாக, தையல் தொழிலை கற்றுக்கொண்டு ஆண்கள் முதல் பெண்கள் வரையில் குடும்பத்துடன் திருப்பூர், கோயம்புத்தூர், சென்னிமலை, உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைதேடிச் சென்றனர்.அதன் பின்னர். திருப்பத்தூர் மாவட்டத்திலேயே பல்வேறு கார்மென்ட்ஸ் கம்பெனிகள் உருவானது. இதையடுத்து வெளிமாவட்டங்களுக்கு வேலை தேடிச்சென்ற 10 ஆயிரம் தொழிலாளர்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கே திரும்பி வந்தனர்.

மாவட்டத்தில் உள்ள 200 கார்மென்ட்ஸ் கம்பெனிகளில் அவரவர் சொந்த ஊர்களில் உள்ள கார்மென்ட்ஸ்களில் வேலை செய்து வந்தனர். இந்த கார்மென்ட்ஸ் கம்பெனிகளில் சட்டை பேண்ட், டீ-சர்ட், கையுறை, உள்ளிட்ட பல்வேறு ஆடைகள் வடிவமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.அதுமட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டத்திலேயே தையல் தொழிலாளர்கள் வீட்டிலேயும், அந்த பகுதிகளில் தனியாக கடைகள் வாடகைக்கு எடுத்து தையல் ெதாழில் செய்து வந்தனர். இப்படி சுமார் 20 ஆயிரம் பேர் தையல் தொழிலையே நம்பியிருந்தனர். கொரோனா பாதிப்பினால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வருமானம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் திருமணம், சீமந்தம், காதுகுத்து உட்பட அனைத்து விதமான சுபநிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. இதனால் புத்தாடை வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் கார்மென்ட்ஸ் கம்பெனிகளில் மட்டும் சுமார் ₹5 கோடி மதிப்பிலான ரெடிமேட் ஆடைகள் தேங்கிக்கிடக்கிறது.

மேலும் தற்போது கொரோனா ஊரடங்கினால் பள்ளி சீருடைகளை தைப்பதற்காக கார்மென்ட்ஸ் கம்பெனிகள் ஆர்டர்கள் கிடைப்பதில்லை.மாவட்டம் முழுவதும் தையல் தொழிலாளர்கள், கார்மென்ட்ஸ் தொழிலாளர்கள் என்று சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு மாவட்டத்தில் தளர்வு செய்யப்பட்டாலும் வெளிமாநிலங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் கார்மென்ட்ஸ் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. எனவே வறுமையில் வாடும் தையல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சுபநிகழ்ச்சிகள் தடையால் வேலைவாய்ப்பு இல்லை
திருப்பத்தூர் மாவட்ட கார்மென்ட்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தையல் தொழிலாளர்கள் கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து சட்டை, பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை தைத்து பெங்களூர், சென்னை, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது வெளிமாநிலங்களுக்கு போக்குவரத்து வசதி பெருமளவு இல்லை. இதனால் ரெடிமேட் ஆடைகள் தேக்கமடைந்துள்ளது.

 இதனால் கார்மென்ட்ஸ் கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பண்டிகை திருமணம், வீடுகளில் சுபநிகழ்ச்சி, திருவிழா, உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து கொள்வார்கள். தற்போது அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்ட காரணத்தினாலும் மக்கள் யாரும் புதத்தாடைகள் வாங்க முன்வருவதில்லை. தைப்பதற்கும் வருவதில்லை. இதனால் வேலைவாய்ப்பு முற்றிலும் முடங்கியுள்ளது. எங்கள் குடும்பத்தினர் வறுமையில் வாடி வருகிறோம். இவ்வாறு கூறினர்.

Tags : Corona ,garment workers ,district ,Tirupathur , 30 thousand, garment workers ,Tirupathur district ,Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...