மரக்காணம் கடற்கரையோர ஏரிநீரை சுத்திகரித்து சென்னை மாநகருக்கு குடிநீர் கொண்டு வரும் புதிய திட்டத்துக்கு ₹161 கோடி ஒதுக்கீடு: ஆண்டுக்கு 2 டிஎம்சி கிடைக்கும்

* பணி முடிய 2 ஆண்டு ஆகும்

சென்னை : சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த நான்கு ஏரிகள் வடகிழக்கு பருவமழை நம்பி தான் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2018ல் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக இந்த 4 ஏரிகளில் நீர் மட்டம் உயராததால் கடந்த ஜனவரியில் இருந்து சென்னை மாநகருக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பாசனத்துக்கு பயன்படாத ஏரிகள், கல்குவாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை ஒரளவு பூர்த்தி செய்தது. இந்த பிரச்சனை மீண்டும் வராமல் இருக்கவும், வருங்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு புதிதாக குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு, வண்டிப்பாளையம் ஆகிய கிராமப்பகுதிகளில் கடற்கரையை ஓட்டி அமைந்துள்ள கழுவேலி ஏரி நீரை நன்னீராக மாற்றி சென்னை குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து நீர்வளத்துறை மேம்பாட்டு குழு சார்பில் இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், இந்த திட்ட பணிக்கென ₹161 கோடி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி,  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஏரி சென்னையில் இருந்து சுமார் 110 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த ஏரியில் இருந்து 30 கிலோ மீட்டர் பரப்பளவில் நீர் பிடிப்பு பகுதிகள் உள்ளது. இந்த கழுவேலி  தண்ணீரை சுத்திகரிக்க, அங்கேயே ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும், ஏரியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில், ரெகுலேட்டர் வைத்து தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. மேலும், அந்த ஏரி முழுவதும் தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஏரியில் 6 டிஎம்சி வரை சேமித்து வைக்க முடியும். இந்த ஏரி மூலம் ஆண்டுக்கு 2 டிஎம்சி அளவுக்கு சென்னையின் குடிநீர் தேவைக்கு பெற முடியும். தற்போது, டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் விரைவில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடிக்ககப்படும்  என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

>