×

காஞ்சிபுரத்தில் இன்று முதல் ஊரடங்கு: குன்றத்தூரில் அனைத்து நுழைவாயில்கள் மூடல்

*சிறப்பு அதிகாரிகள் உத்தரவு

குன்றத்தூர் : காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து நுழைவாயில்களையும் மூட சிறப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட குன்றத்தூர், மாங்காடு பேரூராட்சிகள், குன்றத்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் முனைவர் சுப்பிரமணியன், காவல்துறை டிஐஜி பவானீஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதைதொடர்ந்து, கலெக்டர் பொன்னையாவுடன், இணைந்து குன்றத்தூர், மாங்காடு, திருமுடிவாக்கம், அய்யப்பன்தாங்கல் உள்பட காஞ்சிபுரம் மாவட்டத்தின் நுழைவாயிலாக உள்ள பகுதிகளை நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

அப்போது, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அனுமதியின்றி உள்ளே நுழையாதபடியும், இங்குள்ள மக்கள் வெளியே செல்லாத வகையிலும், அனைத்துப் பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்க உத்தரவிட்டனர். மேலும் உரிய அனுமதியின்றி வரும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் உள்ளே அனுமதிக்க கூடாது என போலீசாரிடம் கண்டிப்பாக தெரிவித்தனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு குன்றத்தூர், மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளில் இன்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அந்த சமயத்தில், மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடைகள் திறக்கப்படாது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், அரிசி, மளிகை பொருட்கள், தண்ணீர் உள்பட அனைத்தும், வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.




Tags : gates ,Kanchipuram , First curfew in Kanchipuram: All gates closed
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 56 பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை