×

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசமா?

சென்னை: ஊரடங்கு கடுமைப்படுத்தப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முடிவெடுக்கவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்க கோரி, வக்கீல் சி.ராஜசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இந்த வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கஜா புயல் போன்ற முந்தைய கால தேசிய பேரிடர்களின் போது நுகர்வோர்களின் கஷ்டங்களை அறிந்து மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதி நீடிக்கப்பட்டது. அதேபோல கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.  நுகர்வோர்களிடமிருந்து மின் கட்டணம் வசூல் செய்ய தடை விதித்தால் அது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.ராஜேஷ், ஒய்.கவிதா ஆஜராகினர். அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகினர். அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் ஜூன் 15ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றனர்.

Tags : districts ,Chennai , Except for 4 districts including Chennai In other districts Is it time to pay the battery?
× RELATED தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில்...