×

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீரின்றி பயிர்கள் கருகும் அபாயம்: குமரியில் 6 கிராம விவசாயிகள் விரக்தி

நாகர்கோவில்: குமரியில் இரு பருவ மழை பெறுவதன் காரணமாக கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அணைகள் அடைக்கப்படுகிறது. அப்போது கால்வாய் பராமரிப்பு, மராமத்து பணிகள் ஆண்டு ேதாறும் நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் என்பது பைல்களில் மட்டும்தான் உள்ளது. இதன் விளைவாக தற்போது கால்வாய் கரைகள் உடைந்தும், படித்துறைகள் சிதைந்தும் காணப்படுகின்றன. இந்த ஆண்டு கொரோனா காலத்தில் விவசாய பணிகள் நடைபெற தடை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. இதற்கிடையே கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு தளர்வில் அரசு கட்டுமான பணிகளை தொடரவும் அனுமதி அளித்து இருந்தது.

ஆனால் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார பிரிவு சார்பில் இந்த பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் முதலே மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து பூதப்பாண்டி, சீதப்பால், தாழக்குடி, வெள்ளமடம், ராமபுரம் ஆண்டார்குளம் ஆகிய பகுதிகளில் பொடி விதைப்பு மற்றும் நடவு பணிகள் வழக்கத்தை விட முன்னதாக தொடங்கி விட்டன. இந்த நிலையில் அணைகள் திறந்த பிறகு, பூலாங்குழி பகுதியில் படித்துறை கட்டும் பணி தொடங்கியது. இதனால் நாஞ்சில் நாடு புத்தனாற்றில் தண்ணீர் அடைக்கப்பட்டது. ஆகவே இங்கிருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெறும் சீதப்பால், தாழக்குடி, வெள்ளமடம், ராமபுரம் உள்பட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கடந்த சில ஆண்டுளாக பயிர் செய்தால் ஏக்கருக்கு ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை நஷ்டம் என்ற நிலையில், விவசாயத்தை விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து பயிர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பயிர்கள் துளிர்விட்டு வளர தண்ணீர் அவசியம் என்ற நிலையில் என்.பி. கால்வாயில் தண்ணீர் அடைக்கப்பட்டு உள்ளது. ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் செலவு செய்து நடப்பட்ட பயிர்கள் கருகும் வகையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளது அனைத்து விவசாயிகளிடம் கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நேற்று முன்தினம் விவசாயிகள் பூதப்பாண்டி பொதுப்பணித்துறை அலுவலகம் சென்று முறையிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதல் படித்துறை கட்டுமானத்தை பாதிக்காத வகையில், சிறிதளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இது குறித்து சீதப்பாலை சேர்ந்த முருகன் கூறியது: தற்போது நெற் பயிர் செய்வது மிகவும் நஷ்டத்தை தருகிறது. தினசரி உழைப்பும், ஒரு முறை பயிர் செய்தால் ரூ.5 ஆயிரத்திற்கு மேல் நஷ்டமும் ஏற்பட்டு வருகிறது. எனினும் பயிர் செய்யாமல் இருக்க கூடாது என்பதற்காக பயிர் செய்கிறோம். தற்போது தண்ணீர் விடாமல் இருக்கின்றனர். ஆகுவே பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும் இது பெருத்த நஷ்டமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்கவும், தண்ணீரை முழுமையாக திறந்து விடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சீரமைக்கப்படாத படித்துறைகள்
தோவாளை கால்வாயில் கால்நடைகளை குளிப்பாட்ட ஒரு படித்துறையும், பொது மக்கள் குளிக்க 3 படித்துறைகளும் உள்ளன. இதில் ஒரு படித்துறை அந்த பகுதியில் உள்ள ரிசார்ட்டால் மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. ஆற்றங்கரை காலனியில் உள்ள படித்துறை முற்றாக சிதைந்து விட்டது. கால்வாயில் மற்றொரு பிரதான படித்துறையை அந்த பகுதியில் செங்கல் சூளைக்கு கனரக வாகனங்கள் செல்ல வசதியாக படித்துறையில் பல அடி உயரத்திற்கு கான்கிரீட் கொட்டப்பட்டு அடைத்து விட்டனர்.  இந்த பகுதியில் இளைஞர்களே இறங்கி குளிக்க முடியாத நிலையில், வயதானவர்கள், பெண்கள் நிலை மிகவும் பரிதாபம். இதுபற்றி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே  ஆக்ரமிப்பை அகற்றி, படித்துறையை முன்பு போல் சீரமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தரமற்ற கட்டுமான பணி
பூலாங்குழி அருகே படித்துறை கட்டும் பணி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையின்றி நடக்கிறது. மிகவும் குறைந்த அளவு சிமென்டில் எம்.சாண்டை அதிகம் கலந்து படித்துறையை தரமற்ற முறையில் கட்டி வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : village farmers ,Public Works Officers ,Kumari ,Kumari. 6 Public , Public Works Officer, Crops, Risk, Kumari
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...