×

காற்றில் பறந்த தனிமனித இடைவெளி: திருவள்ளூர் குப்பை வாகனத்தில் தூய்மைப்பணியாளர்களை ஏற்றிச் செல்லும் அவலம்!!


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் குப்பை வாகனத்தில் மாநகராட்சி ஊழியர்களை தனிமனித இடைவெளியின்றி ஏற்றிச் செல்லும் அவலம் காணப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,168 ஆக உயர்வு கண்டிருக்கிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி 1,500க்கும் மேற்பட்ட நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தனிமனித இடைவெளியின்றி ஆவடியில் குப்பை வாகனத்தில் மாநகராட்சி ஊழியர்களை ஏற்றிச் செல்லும் கொடுமை ஏற்பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று காரணமாக சுமார் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 17 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில், மருத்துவர்கள், காவல்துறையினருக்கு அடுத்தபடியாக சுகாதார ஊழியர்களே உள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் தினந்தோறும் உழைத்து வரும் நிலையில், அவர்களை அழைத்து செல்ல மாநகராட்சி சார்பில் குப்பை வண்டி பயன்படுத்தியது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் அந்த குப்பை வண்டியில் தனிமனித இடைவெளியை சிறிதும் பொருட்படுத்தாமல் ஊழியர்களை ஏற்றி செல்கின்றனர். தமிழக அரசு சார்பில் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகமே இதுபோன்று சமூக இடைவெளி இல்லாமல் மாநகராட்சி ஊழியர்களை ஏற்றிச் செல்லும் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Throwallur ,garbage truck tragedy , Chennai, Rubbish and Garbage, Cleaner
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...