×

‘எல்லைக்கு போறேன்... தைரியமாக இருங்க...’: மனைவியிடம் கடைசியாக பேசிய ராணுவ வீரர் பழனி

சாயல்குடி: எல்லைப்பகுதியில் இந்திய - சீனா ராணுவத்திற்கு இடையேயான மோதலில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி வீர மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று சொந்த ஊர் கொண்டு வரப்பட உள்ள நிலையில் அவரது கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது. லடாக் பகுதியில் இந்திய - சீனா வீரர்களுக்கிடையே நடந்த மோதலில், பலியான தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கடுக்கலூர் கிராமம். ராணுவத்தில் ஹவில்தார் பணியாற்றி வந்த பழனி(40)க்கு வானதிதேவி என்ற மனைவி, மகன் பிரசன்னா (10), மகள் திவ்யா (8) உள்ளனர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான பழனி, பள்ளிப்பருவம் முதல் விளையாட்டு மீது ஆர்வம் உடையவர். 1999ல் தனது 19வது வயதில் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். நேற்று மதியம் வருவாய்த்துறை மூலமாக பழனியின் தந்தை காளிமுத்து மற்றும் மனைவிக்கு இறப்பு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.  

வானதிதேவி கூறுகையில், ‘‘கடந்த 13ம் தேதி கிரஹப்பிரவேசத்தின்போது செல்போனில் எனது கணவர் (பழனி) பேசினார். அப்போது, ‘எல்லைக்கு நான் போறேன். அங்கே போன் சிக்னல் கிடைக்காது. நீங்கள் தைரியமாக இருங்க.. பயப்படாதீங்க...’ என்று ஆறுதலாக பேசினார். ஆனால், அதற்குள் இறந்து விட்டாரே...’’ என்று கூறி கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்கச் செய்தது. ஓராண்டில் ஓய்வு பெற வேண்டியவர் வீரமரணம், மாமனார் உருக்கம்: பழனியின் மாமனார் நாச்சியப்பன் கூறும்போது, ‘‘ராணுவத்தில் 22 வருடங்கள் பணியாற்றி விட்டதால், இன்னும் ஓராண்டில் ராணுவ பணியை நிறைவு செய்து விட்டு, சொந்த ஊர் வர திட்டமிட்டிருந்தார். அதற்குள் வீரமரணம் அடைந்து விட்டார். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அவரின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நாட்டிற்காக உயிர் நீத்த அவரின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் அவரின் வீரமரணத்தை கவுரவிக்க வேண்டும்’’ என்றார்.

சொந்த ஊரில்
இன்று இறுதி சடங்கு: பழனியின் தம்பியும், ராணுவ வீரருமான இதயக்கனி கூறும்போது, ‘‘எங்கள் குடும்ப வறுமை காரணமாக இளம் வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்தார். நானும் ராணுவத்தில் சேர முக்கிய காரணமே அவர்தான். ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பணியாற்றி உள்ளார்.  அண்ணனின் உடல் நாளை (இன்று) சென்னை, மதுரை விமான நிலையங்கள் கொண்டுவரப்பட்டு, ராணுவ வாகனம் மூலமாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது. அங்கு இறுதி சடங்குகள் நடைபெறும்’’ என வேதனையுடன் தெரிவித்தார்.


‘வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை இழந்தானே...’

* கதறி அழும் தந்தை
வீர மரணம் அடைந்த பழனியின் தந்தை காளிமுத்து தொண்டியில் குடியிருக்கிறார். அவர் கூறும்போது, ‘‘விவசாய குடும்பத்தை சேர்ந்த நான், எனது 2 மகன்களின் விருப்பப்படி ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக பாடுபடுமாறு கூறி அனுப்பி வைத்தேன். நாட்டிற்காக வீரமரணம் அடைந்தது மிகவும் பெருமையாக இருந்தாலும், வாழவேண்டிய வயதில் வாழ்க்கையை பறி கொடுத்தது வேதனையாக உள்ளது. இந்த இழப்பு மிகப்பெரியது. நாட்டிற்கும் பேரிழப்பு. எனது பேரக்குழந்தைகள், மருமகளின் நிலைதான் பெரும் கவலையாக உள்ளது’’ என்றார்.

பழனிக்கு வீரவணக்கம் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்,  வெளியிட்ட முகநூல் பதிவில், “லடாக் எல்லைப் பகுதியில் நடந்து வரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய ராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி. திருவாடானை வட்டம் வீர சிங்கம் மடம் பகுதி அருகே உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் இவர். 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி இறுதியில் தனது உயிரையும் ஈந்துள்ளார். பழனியின் குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிதாக கட்டிய வீட்டை காணமுடியாத சோகம்

ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் பழனி குடும்பத்தினர் வசித்து வந்தனர். இப்போது, கழுகூரணி, கஜினி நகரில் பழனி புதிதாக வீடு கட்டியுள்ளார். கடந்த 13ம் தேதிதான் புது வீட்டின் கிரஹப்பிரவேசம் நடந்துள்ளது. லடாக் பகுதியில் மோதல் பிரச்னை இருந்ததால், விடுமுறை கிடைக்காமல் பழனி ஊருக்கு வரவில்லை. எனவே, குடும்பத்தினர் பெரிய அளவில் நடத்தாமல் எளிமையாக கிரஹப்பிரவேசத்தை முடித்துள்ளனர். பழனி இறந்த செய்தி கேட்டதும் அவரது மனைவி வானதிதேவி, ஆசையா கட்டுன வீட்டை நேரில் பாக்காமலே எங்களை அனாதையா விட்டுட்டு போய்ட்டாரே என்று கதறி அழுதார்.

Tags : Palani ,border ,soldier , going , border Palani, last soldier , wife
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்