×

உலகம் முழுவதும் உடல் பருமன், இதய கோளாறு பிரச்சனைகள் உள்ள 170 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன்: உடல் பருமன், இதய கோளாறு பிரச்சனைகள் உள்ள 170 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் covid 19 வைரசால் 81,42,776 பேர் பாதிக்கப்பட்டு, 4, 39,760 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் பாதிப்பு சற்று குறைந்திருந்த பாதிப்பு கடந்த சில நாட்களாக வேகம் எடுத்துள்ளது. அங்கு ஒரு நாளைக்கு சராசரியாக 25,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் ஹைடிராக்சி குளோரோகுயின் மாத்திரையால் கொரோனா சிகிச்சையில் பின்னடைவு ஏற்படுவதாக தெரிவித்துள்ள அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பு; இந்த மாத்திரையால் பக்க விளைவுகள் தான் அதிகம் என்றும், எந்த பலனும் இல்லை என்று கூறியுள்ளது. எனவே ஹைடிராக்சி குளோரோகுயின் மாத்திரையை அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த அளித்த அனுமதியை திரும்ப பெறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த சில வாரங்களாக யாருக்கும் தொற்று ஏற்படாததால் கொரோனா பாதிப்பு இல்லாத முதல் நாடாக அறிவிக்கப்பட்ட நியூசிலாந்தில் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த வீடு வீடாக பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டன. அங்கு இதுவரை 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில் இதய நோய், சிறுநீரக கோளாறு, நீரிழிவு நோய், சுவாச கோளாறு, உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்படுவோர் கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் உலக மக்கள் தொகையில் 20% பேர் அதாவது 170 கோடி பேர் பாதிக்கப்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : Analysts ,world , The world, obesity, heart disease problem, corona prevalence, risk
× RELATED கந்தர்வகோட்டை அருகே உலக பாரம்பரிய தின ஓவியப்போட்டி