×

11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் சபாநாயகர் விரைந்து செயல்பட்டு முடிவு எடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் சபாநாயகர் விரைந்து செயல்பட்டு முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது துணை முதலமைச்சராக இருக்கின்ற ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை 15 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. கடந்த 2016ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் காலமானதை தொடர்ந்து 2017ம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது,  ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தார்கள் என்பது புகார். தொடர்ந்து 11 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயக்கரிடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், சென்னை உயர்நீதிமன்றத்தை திமுக நாடியது. தொடர்ந்து, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திமுகவின் சார்பில் சக்கரபாண்டி மற்றும் அப்போது டிடிவி தினகரன் தரப்பில் இருந்த 7 எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்தார்கள்.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சபாநாயகர் 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 3 மாதமாகியும் சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உச்சநீதிமன்றமே தானாக முன்வந்து 11 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் மீண்டும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சபாநாயகர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பிய  நீதிபதிகள், இந்த விஷயத்தில் சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அத்துடன் வழக்கு விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு அளித்த விளக்கம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுக-வுக்கு எதிராக செயல்படவில்லை.  எனவே ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை என முதல்வர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Supreme Court , 11 MLA, Disqualification, Speaker, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...