×

கடலூர் நகர பகுதியில் மூன்றாம் நாளாக அசுத்தமான குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் கடும் அவதி: நடவடிக்கை எப்போது? நகராட்சி விளக்கம்

கடலூர்: கடலூர் நகரம் 45 வார்டு பகுதி கொண்டது. நாள்தோறும் சுமார் 16.5 லட்சம் லிட்டர் குடிநீர் நகர மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. கடலூர் மஞ்சக் குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் என மூன்று பிரதான பகுதிகளுக்கு கேப்பர் குவாரி ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இதற்கிடையே கடந்த இரண்டு நாட் களாக திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் செம்மண் கலந்த குடிநீர் பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் வினியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து நகராட்சி தரப்பிற்கு சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக வண்டிப்பாளையம் பகுதியிலும் அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இதனால் கடலூர் நகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் விநியோகம் மூன்றாவது நாளாக பாதிப்பை ஏற்படுத்தியது. அத்தியாவசிய தேவையான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து நகராட்சி தரப்பில் கேட்டபோது, கடலூர் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான பைப்புகள் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் கம்மியம்பேட்டை ரயில்வேபாதை அருகிலும் , இதுபோன்று பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஒரு பகுதியிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பின் காரணமாக குடிநீர் பைப்புகளில் செம்மண் கலந்து சென்றுள்ளது. வழக்கமாக குடிநீர் தொட்டிகளில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு சென்றடையும் பொழுது இதுபோன்ற கலப்பின் காரணமாக அசுத்தமாக செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

அசுத்தமான குடிநீர் வருவதற்கு குடிநீர் பைப்பின் உடைப்பு காரணம் என கண்டறியப்பட்ட நிலையில் அதனை சீர்செய்ய போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட குடிநீர் குழாய்களில் ஏற்கனவே உள்ள அசுத்தமான குடிநீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு மீண்டும் தூய்மையான குடிநீர் கிடைப் பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இன்று சீராகிவிடும் நாளைமுதல் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு வழி காணப்படும் என்றனர்.

Tags : Cuddalore: Public Municipal ,Cuddalore , Cuddalore, contaminated drinking water, distribution
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை