திருப்பத்தூரில் காதல் விவகாரம் தொடர்பாக வீட்டிற்கு தீ வைத்த வழக்கு: 5 பெண்கள் உட்பட 10 பேரை கைது செய்தது காவல்துறை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரம் தொடர்பாக வீட்டை சேதப்படுத்தி தீ வைத்த வழக்கில் 5 பெண்கள் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொன்னேரி பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி, சிங்கப்பூரில் பணியாற்றி வரும் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த திருப்பதி ஆகிய இருவரும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்திருந்த திருப்பதியும், பிரியதர்ஷினியும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினர். திருப்பதியின் பெற்றோரும், வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

இதனை அறிந்த கொண்ட பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் அவரது  உறவினர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் திருப்பதியின் வீட்டை சேதப்படுத்தி தீவைத்தனர். இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம் ஆகின. இச்சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை காவல்துறையினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பெண்கள் உட்பட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெண்ணின் தாயும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய திருப்பதி அவரது பெற்றோர், பிரியதர்ஷினி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

Related Stories:

>