×

நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்பு சென்னையா... அலறும் மக்கள்

* சொந்த ஊர்களுக்கு சென்றால் மதிப்பதில்லை
* உறவினர்கள் கூட பக்கத்தில் வந்து பேச மறுப்பு

சென்னை: கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னையின் பெயரை கேட்டாலே மக்கள் அலறி வருகின்றனர். சென்னையில் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ெசன்றால் மதிப்பதில்லை. உறவினர்கள் கூட பக்கத்தில் வந்து பேச மறுத்து வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக வந்தாரை வாழ வைக்கும் இடமாக மாநிலத்தின் தலைநகராக சென்னை இருந்து வந்தது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் இருந்து வந்தாலும், வெளிமாநிலத்தில் இருந்து வந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பூமியாகவும் சென்னை விளங்கி வந்தது. மழையோ, புயலோ என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் சென்னையை நம்பி வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதாக வரலாறு கிடையாது. அந்த அளவுக்கு பிழைப்பை தேடி வந்தவர்கள் சென்னையில் வசித்து தொழில்கள், படிப்பு போன்றவற்றை செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் சென்னையில் உயர்தர மருத்துவ சிகிச்சை உள்பட அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்து வந்தது. இதனால் பலர் சென்னையை தேடி வந்தனர்.

இந்த நிலைமை தற்போது கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது. இதற்கு முழு காரணம் கொரோனா.  கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல், உயிர் பிழைத்தால் போதும் என்று, சென்னையில் வசித்து வந்த வெளிமாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அதுவும் கிடைத்த வாகனங்களில் அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். சொல்லப்போனால் குழந்தை குட்டிகளுடன் நடந்தே சிலர் சொந்த மாநிலங்களுக்கு சென்ற காட்சியை காண முடிந்தது. கொரோனாவல் சென்னையில் தங்கி வேலை பார்த்த வெளிமாநிலத்தை சேர்ந்த 90 சதவீதம் பேர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் சென்னையில் நாளு க்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால், சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பீதியடைந்துள்ளனர். எங்கே நமக்கும் கொரோனா வந்து விடுமோ? என்ற அச்சம் ஒவ்வொருவரிடமும் நிலவி வருகிறது. இதனால், பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையை விட்டு புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இதுவரை லட்சக்கணக்கானோர் சென்னையை விட்டு சொந்த மாவட்டங்களுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருப்பவர்களும் தங்களது மனைவி, மகன், மகள், பெற்றோரை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சொந்த ஊர்களுக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதுவதால் தான் இதே போன்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது. இதற்காக வாகனங்களில் கேட்கும் பணத்தை கொடுத்து சொந்த ஊர்களுக்கு ெசன்று வருகின்றனர். பல அலுவலகங்களில் வீடுகளில் இருந்து ேவலை பார்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் வேலை பார்த்தவர்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். வாகனங்களில் செல்வது அதிகரித்து இருப்பதை தொடர்ந்து சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் செங்கல்பட்டில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன. சரியான இபாஸ் இருந்தால் தான் அவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த ஒரு வாரமாக சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளதால், பலர் தற்போது இரண்டு சக்கர வாகனங்களில் செல்ல தொடங்கினர். கொரோனா பாதிப்பு தொடர்ந்தால் சென்னையில் சென்னைவாசிகள் மட்டும் தான் இருப்பார்கள். சென்னைக்கு பிழைப்பு மற்றும் படிக்க வந்தவர்கள் யாரும் இல்லாத நிலை தான் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் அந்தந்த மாவட்ட எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு  கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ரிசல்ட் வரும் வரை அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா இல்லை என்று தெரிந்தால் மட்டுமே அவர்கள் தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு எந்த நோயும் இல்லாதவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்துக்கு சென்றால் ஊரிலேயே மதிப்பது இல்லை. சென்னையில் இருந்து வந்தால் கண்டு கொள்வதும் இல்லை. வரவேற்பதற்கு பதிலாக சென்னையில் இருந்து ஏன் வந்தாய், நோயை பரப்ப வந்தாயா? என்று கேள்வி கேட்கும் நிலை தான் தற்போது உருவாகியுள்ளது. பக்கத்தில் வந்து பேசுவதற்கே பயப்படுகின்றனர். இவர்கள் தான் இப்படி உறவினர்களும் சென்னையில் இருந்து வருபவர்களிடம் நின்று கூட பேசுவது கூட கிடையாது. ஏதோ? விரோதியை பார்ப்பது போல பார்த்து விட்டு செல்கின்றனர். ஏதாவது ஒரு வழியில் சொந்த ஊர்களுக்கு வந்தால், ஊரில் இருப்பவர்களே சென்னையில் இருந்து வந்துள்ளான் என்று போன் போட்டு அருகில் உள்ள சுகாதார துறை அதிகாரிகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளிடம் காட்டி கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பயந்து, சொந்த ஊர்களுக்கு இங்குள்ளவர்களே இப்படி நடந்து கொள்கிறார்களே? என்று சென்னையில் வந்தவர்கள் அனைவரும் மனம் நொந்து வருகின்றனர்.



Tags : Thousands, Coronal Influence Chenna , per day, screaming people
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...