×

சென்னையில் இருந்து நெல்லைக்கு தாயின் உடலை கார் டிக்கியில் எடுத்து வந்த வங்கி பெண் அதிகாரி: கொரோனாவில் இறந்தாரா என சந்தேகம்

நெல்லை: சென்னையில் இறந்த தாயின் உடலை போலீசுக்கு தெரியாமல் காரின் டிக்கியில் வைத்து நெல்லைக்கு வங்கி பெண் அதிகாரி எடு த்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாளையங்கோட்டை ரஹ்மத்நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தாரின் மனைவி, அவரது மகளுடன் சென்னை வியாசர்பாடியில் தங்கியிருந்தார். அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளையில் தாசில்தாரின் மகள், உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.தாசில்தாரின் மகளுக்கு திருமணமாகி விட்டது. கணவர் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் அவரது தாய் திடீரென்று அங்கு இறந்தார். சென்னையில் கொரோனா பிரச்னை அதிகமாக இருப்பதால், உடலை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் தனது சொந்த ஊரான பாளை ரஹ்மத் நகரில் உடலை அடக்கம் செய்ய முடிவெடுத்தார்.

ஆனால் நெல்லை வருவதற்கு அவர் இ.பாஸ் எடுக்கவில்லை. வங்கி அதிகாரிகள் செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள கார் பாஸ் மூலம் நெல்லை வர முடிவு செய்தார். அதன்படி காரின் டிக்கியில் தாயின் உடலை ஏற்றி வங்கி நண்பர்கள் 2 பேருடன் காரில் நெல்லைக்கு புறப்பட்டார். வரும் வழியில் கங்கைகொண்டான் சோதனை சாவடியில் காரை நிறுத்தி அதிகாரிகள் கேட்ட போது, தான் அவசரமாக பாளை ரஹ்மத் நகருக்கு செல்ல வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி, வங்கியின் உதவி மேலாளர் என்ற செல்வாக்கில் வந்து விட்டார். இங்கு தாயின் உடலை காரிலிருந்து இறக்கிய போது அக்கம் பக்கத்தினர் கவனித்து பாளை போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் ரஹ்மத் நகர் வீட்டுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் உடல் நலமில்லாமல் தனது தாய் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் இறந்ததாகவும், போனில் தகவலை அறிந்து, இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சிங்கப்பூரில் இருந்து தனது சகோதரர் வந்த பின்னர் தான் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விமானங்கள் இந்தியா வருவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்படி அவரது சகோதரர் சிங்கப்பூரிலிருந்து இந்தியா வர முடியும்? என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து மூதாட்டி, கொரோனாவால் இறந்தாரா? என்று பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.



Tags : Bank officer ,Corona ,Chennai ,Paddy , Bank officer, carries mother's body,car deck,Paddy in Chennai, Suspected dead in Corona
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...