×

தென்மேற்கு பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி: பிஏபி அணைகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால் பிஏபி அணைகளின் நீர்மட்டம்  உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் சமவெளி பகுதிகளில் இந்த மாதம் துவக்கத்தில்   வெயிலின் தாக்கம் குறைந்து பலத்தகாற்றுடன் மழை பெய்ய துவங்கியது. இதில், இரண்டு நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சாரலுடன் மீண்டும் பெய்ய துவங்கியது.  இதில், நெகமம், ஆனைமலை, கோட்டூர், ஆழியார், வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, ஒடையக்குளம், அம்பராம்பாளையம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மதியம் கனமழை பெய்தது. இது சில மணி நேரம் நீடித்தது.  கடந்த சிலநாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து தினமும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம்  துவக்கத்தில் இருந்து பெய்தது. ஆனால், சமவெளி பகுதியான பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் ஜூலை மாதம் இறுதியிலே கனமழையாக பெய்தது.

ஆனால் இந்த ஆண்டில் இம்மாதம் துவக்கத்திலிருந்து பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை  பெய்ய துவங்கியுள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளால், பிஏபி திட்டத்திற்குட்பட்ட ஆழியார், பரம்பிக்குளம், சோலையார் அணைகளின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வால்பாறை: வால்பாறை பகுதியில் சாரல் மழை நிலவுகிறது. அவ்வப்போது பெய்துவரும் சாரல் மழை மற்றும் மூடுபனியால் குளிர் நிலவுகிறது. நேற்று காலை 6 மணி நிலரப்படி வால்பாறையில் 7 மி.மீ., சின்னக்கல்லாரில் 17 மி.மீ., கீழ்நீராறு 16 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

Tags : PAP , Farmers' delight , southwest monsoon,expectation ,PAP dams rising
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...