×

இ-பாஸ் வாங்கவில்லை எனக்கூறி நெஞ்சு வலியால் துடித்த முதியவரை 2 மணி நேரம் காக்க வைத்த போலீசார்

சென்னை: பூந்தமல்லி அடுத்த அன்னப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (68). இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மகன் ராமச்சந்திரன் என்பவர், 108 ஆம்புலன்சை தொடர் கொண்டுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், ஒரு ஆட்டோவில் தனது தந்தை மற்றும் தாயை ஏற்றி  ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு  அனுப்பிவிட்டு, அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செட்டிபேடு பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே சென்றபோது அங்கிருந்த போலீசார், ராஜேந்திரன் சென்ற ஆட்டோவை நிறுத்தி இ-பாஸ் இருக்கிறதா என்று கேட்டுள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ராமச்சந்திரன் இறங்கி வந்து, என்னுடைய தந்தைக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வலியால் துடிப்பதால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம். அவசரமாக வந்ததால் இ-பாஸ் எடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் போலீசார், இ-பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது, என கூறிவிட்டனர்.மேலும் போலீசார் ராமச்சந்திரனின் இரு சக்கரவாகனத்தையும் பறிமுதல் ெசய்தனர். ராமச்சந்திரன், பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை போலீசாரிடம் கெஞ்சியும், அவர்கள் அனுமதிக்கவில்லை. அப்போது, என்னை அனுமதிக்காவிட்டாலும் பரவாயில்லை, என் தந்தை மற்றும் தாயை மட்டுமாவது மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அதன் பிறகு போலீசார், ராஜேந்திரன் இருந்த ஆட்டோவை மட்டும் அனுப்பி வைத்தனர். பின்னர், அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு மருத்துவர்கள் இல்லை என்று கூறியதால், பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.உயிருக்கு போராடிய முதியவரை மருத்துவமனைக்கு செல்ல விடாமல் 2 மணி நேரம் போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியது.



Tags : buy, e-pass, Old,2 hours
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...