×

தமிழகத்தில் 12,524 கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக் கேபிள் அமைப்பதில் முறைகேடு: வழக்கு பதிய கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்

சென்னை: தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு தொடர்பாக வழக்கு பதியக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களுக்கு ஏரியல் வழித்தடம், பாதாள வழித்தடம் உள்ளிட்ட வழிகளில் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. திட்டத்தின் மதிப்பீடு ரூ.1950 கோடி என நிர்ணயிக்கப்பட்டது.

டெண்டரில் கலந்து கொண்ட பெரும்பாலான நிறுவனங்களை விலக்கிவிட்டு, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் பரவத் தொடங்கிய டிசம்பர் மாதத்தில் அதில் கவனம் செலுத்தாமல் குறிப்பிட்ட இரு நிறுவனங்களை தேர்வு செய்யும் நோக்குடன், விதிகளை மாற்றம் செய்வதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. முறைகேட்டில் சம்மந்தப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோரின் விருப்பத்திற்கு இணங்க டெண்டர் ஒதுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை செயலாளர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. இந்த டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட முதல்வர், துறை அமைச்சர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி லஞ்ச ஒழிப்புதுறையிடம் மே 11ம் தேதி புகார் கொடுத்தேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : DMK ,Tamil Nadu ,High Court ,villages , DMK lodges petition , High Court seeking, redressal of fiber optic cable , 12,524 villages, Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...