×

சுகாதாரத்துறை - உள்ளாட்சித்துறை இடையே மோதல்?.. மோதலின் தொடர்ச்சியாகவே சுகாதாரத்துறை செயலர் மாற்றம்?

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இணைந்து செயல்பட வேண்டிய சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இடையே பணிப்போர் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும் தடுப்பு நவடிக்கையில் பல்வேறு குளறுபடி இருப்பது அவ்வப்போது அம்பலமாகி வருகிறது. குறிப்பாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் சென்னையில் தொற்றை கட்டுப்படுத்த முடியாமால் அரசு திணறி வருகிறது.

சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளின் இடையே ஏற்படும் மோதல் போக்கே இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பாதித்தவர்களை வீடுகளில் தனிமை படுத்துதல், பரிசோதனைக்கு வருவோரை தனிமை படுத்துதல் போன்றவை தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் வெளியிட்ட முரண்பட்ட அறிவிப்புகளே இதற்கு உதாரணமாக கூறப்படுகிறது. எனவே இரண்டு துறைகளையும் தமிழக முதலமைச்சர் தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டும் நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது சர்ச்சையாக மாறியுள்ளது. அரசின் ஒட்டுமொத்த தவறுக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை மட்டும் பொறுப்பாக்குவது எந்த வகையில் சரியாகும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Tags : Conflict ,Government ,Health Department , Health Department - Local Government, Conflict, Health Secretary, Transition
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...