×

18 சதவீதத்துக்கு இம்மி கூட குறையாது பரோட்டா ஜிஎஸ்டியால் ட்விட்டரில் கலாட்டா: வரியில கூட பாகுபாடா? வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

புதுடெல்லி: ரொட்டிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி உள்ள நிலையில், பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதித்தது பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் கோபம் அடைந்த நெட்டிசன்கள், மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.  பசியோடு ஓட்டலில் போய் உட்காரும்போதே, பர்சுக்கு ஏத்த மாதிரி டிஷ் இருக்கா என்பதை மெனு கார்டில் தேடாதவர்கள் இருக்க முடியாது. வயிறு கம்முனு இருக்கனும்னு நினைக்கிறவர்கள் பெரும்பாலும் தேர்வு செய்வது பரோட்டாதான். பெரிய, சிறிய ஓட்டல் முதல் தள்ளுவண்டி கடைகளில் கூட கிடைக்கும் அயிட்டம் இது. கொத்து பரோட்டா, வீ்ச்சு பரோட்டா, ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு. வறுத்து எடுத்த விருது நகர் புரோட்டாவுக்கு மவுசு தனி. சூடாக பரபரவென பிய்த்துப்போட்டு சால்னா அல்லது குருமாவை ஊற்றி 4 சாப்பிட்டாலே போதும். வயிறு நிறைந்து விடும்.

இப்படி நம்மூர் உணவு அயிட்டத்தோடு இரண்டற கலந்து விட்ட புரோட்டாவுக்கு வரி விதித்ததில் ஆரம்பித்த பிரச்னை, இன்று பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது.  விஷயம் வேறொன்றும் இல்லை. பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம், ரெடிமேட் பரோட்டா, சப்பாத்தியை தயாரித்து விற்பனை செய்கிறது. இதற்கு வரி விதிப்பு தொடர்பாக இந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, கர்நாடகாவில் உள்ள ஜிஎஸ்டிக்கான தீர்ப்பாயம் விசாரித்தது. அதில், ரொட்டி வேறு, பரோட்டா வேறு என்ற விளக்கம் அளித்த தீர்ப்பாயம். ரொட்டிக்கு 5 சதவீதம், பரோட்டாவுக்கு 18 சதவீதம் வரி என கறாராக கூறிவிட்டது.
 இது நெட்டிசன்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்திவிட்டது. நாடு இருக்கும் பிரச்னையில் இதுதானா முக்கியம் என்று சமூக வலைதளங்களில் அனல் பறக்க விவாதித்து வருகின்றனர். வட மாநலத்துல ரொட்டிதான் பிரதான உணவு. அதுக்காகத்தான் ரொட்டிக்கு 5 சதவீதம் மட்டும் வரி போட்டீங்களா? தென் மாநிலங்களில் ஏழை பாழைங்க சாப்பிடற பரோட்டாவுக்கு 18 சதவீத வரி போட்டது ரொம்ம்ப அநியாயம்.

இது உணவு மற்றும் கலாசார பாசிசம் என கவலையையும் கோபத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தியுள்ளனர். பலர் விதவிதமான மீம்ஸ்களை போட்டு சமூக வலைதளங்களில் கலாய்த்துள்ளனர். இந்த விவகாரம், டிவிட்டரில் தேசிய அளவில் நேற்று டிரெண்டிங் ஆகிவிட்டது. தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவையும் இது விட்டு வைக்கவில்லை. ‘தற்போது நாடு சந்திக்கும் சவால்களுக்கு இடையே, பரோட்டாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கவலைப்பட வேண்டும்போல் தெரிகிறது. வரி அதிகரித்ததால் இனி பரோட்டாவுக்கு பதில், பரொட்டிகள் உருவாகலாம்’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Tags : Nittins ,Galata , Barotta, GST, Tax
× RELATED நடுத்தர குடும்பத்து சுவாரஸ்ய...