×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 82 நாட்களுக்கு பிறகு அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம்: இ-பாஸ் கிடைக்காததால் ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 82 நாட்களுக்கு பிறகு அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் இ-பாஸ் கிடைக்காததால் ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றமடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா வைரஸ்  பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 8ம் தேதி முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதில் கடந்த 8, 9ம் தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும், நேற்றுமுன்தினம் திருமலை பாலாஜி நகர் பகுதி பக்தர்களும் என 21,830 பேர் சோதனை அடிப்படையில் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். அவ்வாறு தரிசனம் செய்தவர்கள் முதல் நாளில் ₹26 லட்சம், 2வது நாளில் ₹20.80 லட்சத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.

இந்நிலையில் நேற்று முதல் வெளிமாநில பக்தர்கள் உட்பட அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில்  நாளொன்றுக்கு 3000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இதுதவிர ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காத பக்தர்களின் வசதிக்காக 3000 இலவச டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டன. அதன்படி, 82 நாட்களுக்கு பிறகு நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அவர்களில் பெரும்பாலானோருக்கு ஆன்லைனில் டிக்கெட் கிடைத்தது. ஆனால் ஆந்திர மாநில அரசின் இ-பாஸ் கிடைக்கவில்லை.

இதனால் பல பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆன்லைன் டிக்கெட் பெற்ற 50 பக்தர்கள் நேற்று தரிசனம் செய்ய டிக்கெட் கிடைத்தது. ஆனால் அவர்களுக்கு ஆந்திர அரசின் இ-பாஸ் கிடைக்கவில்லை.
இதேபோல் தமிழகம், கர்நாடகா, தெலங்கானா உட்பட வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆன்லைனில் தரிசன டிக்கெட் கிடைத்தும்  இ-பாஸ் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.



Tags : pilgrims ,Tirupati Ezumalayan ,Temple Tirupati Ezumalayan Temple , Tirupati Ezumalayan Temple., All Devotees, Swami Darshan
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்