×

மாவீரன் அன்பழகனுக்கு வீர வணக்கம்: மக்களுக்கான தியாக இயக்கம் திமுக ,..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்

சென்னை: மக்களுக்கான தியாக இயக்கம் திமுக என மரண சாசனம் எழுதிச் சென்றிருக்கும் மாவீரன் அன்பழகனுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஜெ.அன்பழகன், மக்கள் பணிக்கு தன் இன்னுயிர் தந்து நம் கண்களைக் கடலாக்கி, நெஞ்சத்து வானத்தில் என்றும் மறையாத சூரியனாகச் சுடரொளி வீசிக் கொண்டிருக்கிறார்.  2001ம் ஆண்டு தேர்தலில் தியாகராயர் நகர் தொகுதியிலிருந்தும், 2011, 2016 தேர்தல்களில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியிலிருந்தும் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மூன்று முறையும் திமுக எதிர்க்கட்சி என்ற நிலையிலிருந்தபோதும், ஆளுந்தரப்பின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், பேரவையில் துணிவுடன் உரிமைக் குரல் எழுப்பியவர்.

அவையில் இல்லாதோர் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கவேண்டும் என்கிற மரபினை மதிக்காத அதிமுகவினர், திட்டமிட்டே - வேண்டுமென்றே நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் குறித்து வன்மத்துடன் பேசும்போது, சிங்கமென ஒரு குரல் சட்டப்பேரவையில் உடனடியாகச் சிலிர்த்தெழும் என்றால், அது அன்புச் சகோதரர் ஜெ.அன்பழகனின் குரல்தான். தலைவர் பற்றி ஒரு சொல்கூட தரக்குறைவான முறையில் மாற்றாரால் உச்சரிக்கப்படுவதை அவர் ஒருபோதும்  பொறுத்துக்கொள்ள மாட்டார்.  திமுக நடத்திய போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி, சிறை செல்லத் தயங்காதவர். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஜெ.அன்பழகன் கைது செய்யப்பட்டபோது, அவரை விடுவிக்கக் கோரி, எழும்பூரில் காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பாக தலைவர் கலைஞரே போராட்டக் களம் கண்டார் என்கிற பெருமைமிகு வரலாறு ஜெ.அன்பழகனுக்கு உண்டு.

 இந்தக் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில், முன்னேற்பாடுகளின்றி  அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், வாழ்வாதாரங்களை இழந்து தவித்த ஏழை மக்களின் பசித்துயர் போக்கிட திமுக களமிறங்கிச் செயலாற்றியது. எப்போதும் மக்கள் பக்கம் நிற்கும் இயக்கமான திமுகவின் அந்தக் களச் செயல்வீரன், மக்களின் பசி போக்கி, பட்டினிச்சாவினைத் தடுத்திடும் பணியில் அயராது ஈடுபட்டார். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருந்த போதும், ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளின் காரணமாக நோய்த் தொற்று ஏற்பட்டு, ஜூன் 2ம் தேதி குரோம்பேட்டை - ரேலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கடும் உயிர்ப் போராட்டம் நடத்தினார். நம் எல்லோரையும் விட்டுப் பிரிந்துவிட்டார் அன்புக்குரிய தொண்டர் அன்பழகன். இல்லை... இல்லை... அவர் பிரியவில்லை.

 ஒரு பேரிடர் நேரத்தில், தன்னைப் பற்றியோ தனது உடல் நலன் பற்றியோ  கவலைப்படாமல், களத்தில் நின்ற மாவீரனாக மக்கள் மனதில் நெடிதுயர்ந்து வாழ்கிறார். தியாகச் சுடராக, அவரது குடும்பத்தில் மட்டுமல்ல, திமுகவினர் இல்லங்களில் எல்லாம் ஒளி விடுகிறார். சுயமரியாதைச் சுடராக நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறார். அவர் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறார்.  இந்த நோய்த்தொற்று காலத்தில்,  மிகுந்த பாதுகாப்புடன், கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் ஒவ்வொரு உடன்பிறப்பும் செயல்படவேண்டும் எனப் பணிவுடன் வேண்டுகிறேன். மக்களுக்கான தியாக இயக்கம் திமுக என மரண சாசனம் எழுதிச் சென்றிருக்கும் மாவீரன் ஜெ.அன்பழகன் வீரவணக்கம் செலுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : hero ,war ,DMK , Great prerogative, heroic Hello, motion DMK, volunteers, MK Stalin, Letter
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்