×

மகள் காதல் திருமணத்துக்கு உதவியவர் கொலை அதிமுக நகர செயலாளர் தலைமறைவு: திருமங்கலத்தில் பரபரப்பு

மதுரை: அதிமுக நகர செயலாளரின் மகள் காதல் திருமணத்திற்கு உதவியவர் கொலை செய்யப்பட்டார்.  தலைமறைவான அதிமுக நகர செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.    மதுரை மாவட்டம், திருமங்கலம், முகமதுஷாபுரத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் மணிகண்டன்(27). மதுரை தபால் தந்தி நகரில் வசித்து வந்தார். தனியார் பால் நிறுவன ஊழியர். இவரது மனைவி தீபிகா(24). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 7ம் தேதி திருமங்கலம் அருகே புங்கன்குளத்தில் உள்ள தனியார் தோட்டத்து வீட்டு மாடியில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மனைவியிடம் திருமங்கலத்தில் உள்ள நண்பர்களை பார்த்து வருவதாக கூறி சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீபிகா சம்பவம் குறித்து செக்கானூரணி போலீசில் புகார் செய்தார்.

பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உடலை வாங்க மறுத்த மனைவி மற்றும் உறவினர்கள் இந்த கொலையில், திருமங்கலம் நகர அதிமுக செயலாளர் விஜயனுக்கு சம்பந்தமுள்ளதாக கூறி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து விசாரணை தீவிரமடைந்தது.உறவினர்கள் கூறும்போது, ‘‘அதிமுக நகர செயலாளரான விஜயனின் மகளை, மணிகண்டனின் உறவினர் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு மணிகண்டன் உதவினார். இதனால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மணிகண்டனின் நண்பரை போனில், கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். அந்த ஆடியோவில் விஜயன் ஆவேசமாகவும், ஆபாசமாகவும் மணிகண்டனை அவரது நண்பரிடம் திட்டியுள்ளார். இதுதொடர்பாக மணிகண்டன் தரப்பில் புகார் கொடுத்தும், போலீசார்  ஏற்கவில்லை. மணிகண்டன் கொலை செய்யப்பட்டதற்கு விஜயன் தான் காரணம்’’ என்றனர்.  இந்நிலையில், செக்கானூரணி போலீசார், திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேலு, பிரகாஷ் மற்றும் அதிமுக நகர செயலாளர் விஜயன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘இந்த கொலையில் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் தொடர் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவான அதிமுக நகர செயலாளர் விஜயனை தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.


Tags : Murder ,Daughter Romantic Marriage Murder ,City Secretary ,Daughter Roll Murder of Murder ,AIADMK ,Thirumangalam , Murder, Daughter Role Murder, AIADMK City ,Secretary Hides,Thirumangalam
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...