×

திருவள்ளூர் கூவம் ஆற்றில் தொடரும் மணல் கொள்ளை: வேடிக்கை பார்க்கும் போலீசார்

திருவள்ளூர்: திருவள்ளூர் கூவம் ஆற்றுப்படுகையில், இரவு நேரங்களில் மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. இதை வருமானம் கருதி டவுன் போலீசார் கண்டும் காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து கூவம் ஆறு துவங்குகிறது. திருவள்ளூர் - புட்லூர் செல்லும் சாலையோரம் இந்த கூவம் ஆறு செல்கிறது. இங்கு பைக்குகளில் மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. இதை அவ்வழியாக ரோந்து செல்லும் டவுன் போலீசாரும் கண்டும், காணாமல் இருக்க தினமும் குறிப்பிட்ட தொகையை மணல் கடத்துபவர்கள் கப்பம் கட்டுகின்றனர். இதனால் மணல் கடத்தும் வாகனங்களை பிடிப்பதில்லை. டவுன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தாலும், மணல் கடத்துபவர்களிடம் தகவல்களை போலீசார் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நகர மக்கள் சிலர் கூறுகையில், ‘’மணல் கடத்தல் தொழிலில் இரவில் மட்டும் பணிபுரிந்த தொழிலாளர்கள் இப்போது ஷிப்ட் முறையில் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இதனால், ஆற்றுப்படுகையில் பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகியுள்ளன. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றனர். எனவே வருவாய்த்துறை மற்றும் போலீசார் இணைந்து, கூவம் ஆற்றில் நடைபெற்றுவரும் மணல்கொள்ளையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvallur Koovam River ,Fun cops ,river ,Thiruvallur Koovam , Sand burglary , Thiruvallur Koovam, Fun cops
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை