×

கொரோனா ஊரடங்கால் விற்பனையாகாமல் ஆயிரக்கணக்கில் தேக்கம் பூச்சிகளுக்கு இரையாகும் மக்காச்சோள மூட்டைகள்

* தமிழக அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் வேண்டுகோள்

சாத்தூர்: கொரோனா ஊரடங்கால் விற்காமல் தேங்கிக் கிடக்கும் மக்காச்சோளத்தை பூச்சிகள் அரித்து வருகின்றன. எனவே, உடடினயாக தமிழக அரசு நேரடி ெகாள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சுற்றியுள்ள ஓடைப்பட்டி, போத்திரெட்டிபட்டி, உப்பத்தூர் சுப்பையாபுரம், முள்ளிச்செவல், சிப்பிப்பாறை உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மழையில்லாத காரணத்தால் மானாவாரி விவசாயத்தையே நம்பியுள்ளனர். இதில் அதிகமானோர் மக்காச்சோளத்தை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் படைப்புழு தாக்குதல், விதை, உரம் விலையேற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்கொண்டு, விவசாயிகள் மக்காச்சோளம் விளைச்சலை முடித்தனர். ஆனால், அவர்களுக்கு கொரோனா ஊரடங்கு பேரிடியாக வந்தது. நான்கு மாதங்கள் உழைத்து மகசூல் வீடு வந்து சேர்க்கும் நேரத்தில், ஊரடங்கால் பொது போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. இதனால் விளைந்த மக்காச்சோளத்தை வாங்க வியாபாரிகள் வரவில்லை. அப்படி வந்தாலும் பல்வேறு காரணங்களைக் கூறி குறைந்த விலையில் கேட்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். குவிண்டால் ரூ.2,500 வரை விற்ற மக்காச்சோளம், தற்போது ரூ.1,300க்கு கூட வாங்க ஆளில்லை என வருந்துகின்றனர்.

இதனால் சாத்தூரைச் சுற்றியுள்ள விவசாயிகளின் வீடுகளில் மக்காச்சோளம் மூட்டை மூட்டையாக தேக்கமடைந்துள்ளது. இடமில்லாமல் ஒரு சில ஊர்களில் தொடக்க வேளாண்  கூட்டுறவு கடன் சங்க குடோனில் சேமித்து உள்ளனர்.  சராசரியாக ஒரு கிராமத்திற்கு 5 ஆயிரம் மூட்டைகள் வீதம் தேக்கமடைந்துள்ளன. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்தவர்கள், மக்காச்சோளத்தை விற்காததால் கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.மத்திய அரசு அறிவித்த ஆரம்ப கட்ட ஆதாய விலையான ரூ.2 ஆயிரத்திற்காவது, அரசு தங்களிடமுள்ள மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘அரசே நேரடியாக கொள்முதல் செய்யாவிட்டால் மக்காச்சோளத்தை பூச்சி அரித்து மக்கிப்போகும். இதனால் எங்கள் வாழ்வே கேள்விக்குறியாகி விடும்.  மழைக்காலம் நெருங்கி வருவதால் மீண்டும் அடுத்தகட்ட விவசாயப்பணிகள் ஆரம்பமாகி விட்டது. ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழலில் மீண்டும் விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது’’ என வருத்தத்தோடு தெரிவித்தனர்.



Tags : prey ,Corona , Maize bundles , thousands , stagnant insects , selling Corona curtains
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!