×

குமரியில் மேலும் 5 வீடுகள் இடிந்தன மாம்பழத்துறையாறு அணை மறுகால் பாய்கிறது

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் மாம்பழத்துறையாறு அணை நிரம்பி நேற்று முதல் மறுகால் பாய்கிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் காணப்பட்ட இந்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை. மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்கு முதல் முறையாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணை நீர்மட்டம் 39.10 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 440 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் அணையில் இருந்து 321 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு 296 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்பட்டிருந்தது. பொய்கையில் 14.50 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையானது உச்ச நீர்மட்டமான 54.12 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து அணைக்கு வந்துகொண்டிருந்த 52 கன அடி தண்ணீர் அப்படியே திறந்துவிடப்பட்டுள்ளது. இது நேற்று மாலையில் 35 கன அடியாக குறைந்தது. முக்கடல் அணை நீர்மட்டம் 7 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 5 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 7.42 கன அடி வீதம் குடிநீருக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மழை காரணமாக கல்குளம் தாலுகாவில் 2 வீடுகளும், கிள்ளியூரில் 3 வீடுகளும் என்று மொத்தம் 5 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் ஒரு வீடு முழுமையாகவும், 4 வீடுகள் பகுதியளவும் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Tags : houses ,Kumari , Five more houses, destroyed, Kumari
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்