×

வேறு வழி பற்றி சிந்திக்கவில்லை; இந்தியா-நேபாளம் இடையேயான எல்லை பிரச்னையை பேச்சு மூலம் தான் தீர்க்க முடியும்...நேபாள வெளியுறவுத்துறை தகவல்

நேபாளம்; இந்தியாவுடனான எல்லைப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான தயாராகவுள்ளதாக நேபாள அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. இந்தியா - சீனா இடையே வரையறுக்கப்படாத எல்லை பிரச்னை கடந்த 1962ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. இதேபோல், இந்தியா-நேபாளம் இடையேயான எல்லை பிரச்னையும் பல ஆண்டாக தீர்க்கப்படாமலேயே உள்ளது. காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அப்பகுதிகள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்திய அரசு தெரிவித்து வருகிறது. அப்பகுதிகள் நேபாளத்தின் தார்சுலா மாவட்டத்தை சோ்ந்தவை என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது. எனவே, இவை சர்ச்சைக்குரிய பகுதிகளாகவே இருந்து வருகின்றன.

இந்தச் சூழலில், காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளை இணைத்து நாட்டின் புதிய அதிகாரப்பூர்வ வரைபடத்தை நேபாளம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா மட்டுமின்றி உபி.யின் கோரக்பூர் அருகே உள்ள சாஸ்தா உள்ளிட்ட பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இது இந்தியா, நேபாளம் இடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதிகளுக்கு நேபாளம் திடீரென சொந்தம் கொண்டாட காரணம், திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்ரீகர்கள் பயணம் செய்வதற்கான நேரத்தை குறைக்கும் வகையில், உத்தரகண்ட் மாநிலம் தர்சுலாவில் இருந்து லிப்புலேக் பாஸ் வரையிலான 80 கிலோ மீட்டர் வரையிலான சாலையை இந்தியா அமைத்தது தான். இந்த சாலை சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கு நேபாள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து நேபாள அமைச்சரவையில் பேசிய அந்நாட்டு பிரதமர் கே.பி ஷர்மா வோலி, இந்தியாவின் பிடியில் உள்ள சர்சைக்குரிய பகுதிகள் நிச்சயமாக மீட்கப்படும் என தெரிவித்தார். மேலும் சீனா, இத்தாலி அதிக தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸை காட்டிலும் இந்தியா வைரஸ் அபாயகரமானது என விமர்சித்திருந்தார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி, எல்லைப் பிரச்சனை தொடர்பாக பேச்சுவாரத்தை நடத்த இந்தியாவுக்கு நாங்கள் சரியான நேரத்தில் கோரிக்கை விடுத்து வருகிறோம், விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகாண முடியும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்த அவர் இது தொடர்பான வேறு வழிகளைப் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Nepal ,border dispute ,Indo ,Nepal State Department , Not thinking the other way around; India-Nepal border dispute is the only solution to the issue ...
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...