×

சேலம் ரயில்வே கோட்டம் முழுவதும் பழுதடைந்த தண்டவாளங்களை மாற்றி அமைக்கும் பணி தீவிரம்: ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி நடவடிக்கை

சேலம்: கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் ரயில் போக்குவரத்தை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு நகரங்களுக்கு இடையே சரக்கு ரயில்கள், சிறப்பு ரயில்கள் இயக்கத்தை மட்டும் மேற்கொண்டுள்ளனர். ரயில்கள் இயங்காத இக்கால கட்டத்தை பயன்படுத்தி, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகளை முடித்திட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பழுதடைந்த ரயில்வே பாலங்களை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டுகின்றனர். மேலும், சிக்னல் மாற்றம், யார்டு மாற்றம், பழுதடைந்த தண்டவாளங்களை மாற்றி அமைக்கும் பணி போன்றவற்றை கோட்டம் வாரியாக தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு கோட்டத்திற்கும் சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து, நிலுவை பணிகளை மேற்கொண்டுள்ளனர்.சேலம் ரயில்வே கோட்டத்தில், ஈரோடு காவேரி பாலம் அருகே 100 ஆண்டு பழைமையான தரை பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக பாலம் அமைக்கப்பட்டது. இதேபோல், தொடர்ந்து கோட்ட பகுதியில் சேலம்-சென்னை மார்க்கம், சேலம்-கோவை மார்க்கம், சேலம்-கரூர் மார்க்கம், சேலம்-விருத்தாச்சலம் மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்களில் பழுது நீக்கும் பணியை கோட்ட கட்டுமானம் மற்றும் போக்குவரத்து பிரிவு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் தண்டவாளங்களை ஆய்வு செய்து, பழுதடைந்திருக்கும் தண்டவாளத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய தண்டவாளத்தை பொருத்தி வெல்டிங் வைத்து இணைத்து வருகின்றனர். சேலம்-விருத்தாச்சலம் மார்க்கத்தில் நேற்று இப்பணி நடந்தது. செவ்வாய்பேட்டை சத்திரம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் டவுன் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட பகுதியில் பழுதடைந்திருந்த தண்டவாளங்களை கண்டறிந்து, அதனை அகற்றி புதிதாக தண்டவாளத்தை பொருத்தினர். தொடர்ந்து பழுது நீக்கும் குழுவினர், ஆத்தூர் நோக்கி செல்லும் பாதையில் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். இது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோட்டம் முழுவதும் ரயில் இயங்காத இக்காலக்கட்டத்தை பயன்படுத்தி, தண்டவாள சீரமைப்பு பணியை மேற்கொள்கிறோம். ஈரோடு, கோவை, கரூர், ஊட்டி மலைப்பாதை, சேலம், ஆத்தூர், ஓமலூர், பொம்மிடி பகுதியில் இப்பணிகளை தனித்தனிக்குழுக்களாக பிரிந்து செய்கின்றோம். ஊரடங்கு முடிந்து ரயில் இயக்கம் தொடங்கப்படும் முன், ரயில் பாதைகளை மேம்படுத்தி விடுவோம். அதேபோல், சில இடங்களில் யார்டு பகுதியிலும் பராமரிப்பு வேலைகளை செய்கின்றோம்,’’ என்றனர்.



Tags : railway line ,Salem , Work intensification, replace damaged, rails across Salem railway , curfew
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின