×

பட்டிவீரன்பட்டியில் பட்ட மரங்கள் அழிப்பு : அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பகுதியில் வறட்சியால் பட்டுப்போன தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள பகுதியில் கடும் வறட்சி, பருவ மழை பொய்த்தது, விவசாய கிணறுகள் வறண்டது போன்ற காரணங்களினால் தென்னை மரங்கள் பட்டுபோய் விட்டன. இவ்வாறு பட்டுப்போன தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அழித்து வருகின்றன. பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு,மருதாநதி அணை கோம்பை, சித்தயன்கோட்டை, தேவரப்பன்பட்டி, எம்.வாடிப்பட்டி,சுந்தரராஜபுரம், ஒட்டுப்பட்டி, சேவுகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் தென்னை விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளது.

இப்பகுதிகளில் தொடர்ந்து பருவமழை பொய்த்து வருவதால் கடும் வறட்சி ஏற்பட்டு தென்னை விவசாயம் அழிந்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் கயிறு உற்பத்தி, தென்னம்பாலை உற்பத்தி, கிடுகு உற்பத்தி, வீடு துடைப்பான் என தென்னை மரங்களை சார்ந்த தொழில்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.அரசு நிவாரணம் பெறுவதற்காக பல விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டாமல் விட்டு வைத்துள்ளனர். இதனால் மாற்று விவசாயத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். ஒரு சிலர், மாற்று விவசாயம் செய்வதற்காக பட்டுப்போன தென்னைமரங்களை அகற்றி வருகின்றனர். எனவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Government , Deforestation , Pattiviranpattu Trees, Relief, Government
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை