×

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தோர் பட்டியலில் 236 பேரின் பெயர்கள் விடுபட்டது அம்பலம் : குளறுபடிகளை கண்டறிய சிறப்புக் குழு அமைப்பு!!


சென்னை : சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த 236 பேரின் பெயர்கள் பலியானோர் பட்டியலில் இருந்து விடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்த 20 பேரின் விவரங்கள் இறந்தோர் பட்டியலில் இடம் பெறாதது அண்மையில் தெரியவந்தது. இது தொடர்பான தகவல்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை மாநகராட்சி பராமரித்து வரும் கொரோனா இறப்பு பட்டியலை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அப்போது சுகாதாரத்துறை இயக்குனரகத்தின் பட்டியலை விட 236 மரணங்கள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு சதவீதம் 1 % குறைவாகவே இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி வந்த நிலையில், தற்போது அது 0.7%ல் இருந்து 1.5%ஆக உயர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து குழப்பங்களை தவிர்க்க கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரங்களை தினசரி அனுப்புமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. உயிரிழப்பு பதிவேட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து களைவதற்காக சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வீடு வீடாகச் சென்று இறந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து அவர்கள் மரணத்திற்கான காரணத்தை கண்டறிந்து தெரிவிக்குமாறும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : coroners ,Chennai , Chennai, Corona, List, Names, Ambala, Mess, Special Committee, Organization
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...