×

மக்கள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்திருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதா?: மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவின் கோரப் பிடியினாலும், பொருளாதார பேரழிவினாலும்  சிக்கி தவித்துக் கொண்டிருக்கிற மக்கள் மீது கடுமையான சுமையை ஏற்றுகிற வகையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய பாஜ அரசு உயர்த்தியிருக்கிறது.  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை ஈவு இரக்கம் இல்லாமல் மத்திய பாஜ அரசு மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது.

அதேபோல, தமிழக அரசு கடந்த மே 4ம் தேதி மதிப்பு கூட்டுவரியை உயர்த்தியதால் பெட்ரோல் விலை ரூ.3.26, டீசல் விலை ரூ.2.51 ஆக ஏற்கனவே உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை அனைவரும் புரிந்து கொள்ளலாம்.எனவே, கொரோனா தொற்றினாலும், பொது ஊரடங்கினாலும், வேலையை இழந்து, வருவாய் துறந்து, வாழ்வாதாரத்தை பறிகொடுத்து, அச்சம், பீதியோடு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பாஜ அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : KS Alagiri , People's livelihoods, gasoline, diesel prices, KS Alagiri, condemnation
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...