×

தேயிலைத்தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்: தொழிலாளர்கள் பீதி

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலைத்தோட்டப் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள், பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளான கோட்டப்பாடி, சேலக்குன்னு, அத்திக்குன்னு, சேரம்பாடி மற்றும் சேரம்பாடி அரசு தேயிலைத்தோட்டம் சரகம் 1 உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  குடியிருப்பை ஓட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன. இவை இரவு நேரத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பிற்குள் நுழைந்து விடுவதால் பொதுமக்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

நேற்று சேரம்பாடி டேன்டீ பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் 8 யானைகள் முகாமிட்டிருந்தன. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறிப்பதற்கு பயந்து வேலைக்கு செல்ல மறுத்தனர். வனத்துறையினர் யானைகளை சத்தமிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். டேன்டீ பகுதியில் இருந்து காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டிட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீட்டை இடித்து பொருட்கள் சூறை
குன்னூர் அருகேயுள்ள கிளிஞ்சடா  வண்ணாமட்டம் பகுதியில் குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானைகள் சரோஜா  என்கிற மூதாட்டியின் வீட்டை இடித்து, உள்ளே புகுந்து அரிசி, சர்க்கரை,  பருப்பு மற்றும் தானிய வகைகளை சேதப்படுத்தியது. வீட்டின் பின்புறம் சென்று  வாழைத் தோட்டம் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த பீன்ஸ் தோட்டங்களை  முழுமையாக  சேதப்படுத்தியது. இரவு நேரங்களில் யானைகள் மீண்டும் வரும்  என்பதால் கிராம மக்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று  கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : elephants camp ,tea estate ,panic ,Wild Elephants Camp , Wild elephants ,camp, tea estate, Workers panic
× RELATED 4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல்...