×

ஓட்டல்களில் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்: காஞ்சி கலெக்டர் அறிவுறுத்தல்

காஞ்சிபுரம்: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கைகள் மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஓட்டல்களில் பின்பற்றவேண்டிய செயல்முறைகள் குறித்து கலெக்டர் பொன்னையா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது. அனைத்து ஓட்டல்களின் முகப்பிலும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு, அங்கு வரும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்க வேண்டும். பரிசோதனையில் காய்ச்சல் இருப்பின் உள்ளே அனுமதிக்கக் கூடாது. மருத்துவரிடம் பரிசோதனை செய்யும்படி அறிவுறுத்த வேண்டும்.

அனைத்து ஓட்டல்களின் முகப்பிலும் கைகளை கழுவும் வகையில் சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வைக்க வேண்டும். கண்டிப்பாக குளிர்சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது. மேலும் நன்கு காற்று உள்ளே வந்து செல்லும் வகையில் அனைத்து சாளரங்களையும் திறந்து வைக்க வேண்டும். அனைத்து மேஜைகளிலும் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வைக்க வேண்டும். மேஜைகள் மற்றும் நாற்காலிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அனைத்து மேஜை, நாற்காலிகளை 1 மீட்டர் சுற்றளவில் இடைவெளியில் வைக்க வேண்டும்.

அனைத்து பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமையறையில் சமையலர் மற்றும் மற்ற பணியாளர்கள் ஆடை, தொப்பி முககவசம் மற்றும் கையுறை அணிவதை உறுதிபடுத்த வேண்டும். பயன்படுத்திய தொப்பி, கையுறை, முககவசங்களை பாதுகாப்பாக அழிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : hotels ,kanji collector , Hotels, safety procedures, kanji collector, instruction
× RELATED சென்னையில் ஹோட்டல்களில் அமர்ந்து...