×

லிட்டருக்கு 60 காசு வரை அதிகரிப்பு பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக எகிறியது

* ஒரு வாரத்தில் லிட்டருக்கு ரூ.7 வரை உயர வாய்ப்பு
* எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பகீர் தகவல்

புதுடெல்லி: தொடர்ந்து 2வது நாளாக, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. சென்னையில் நேற்று 53 காசு உயர்ந்து ₹76.60 ஆகவும், டீசல் 51 காசு உயர்ந்து ₹69.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 நாளில் சென்னையில் பெட்ரோல் ₹1.06, டீசல் ₹1.03 அதிகரித்துள்ளது. பிற நகரங்களில் லிட்டருக்கு ₹1.20 வரை உயர்ந்து விட்டது. அடுத்த ஒரு வாரத்தில் லிட்டருக்கு ₹5 முதல் ₹7 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைக்கின்றன. ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு  விலையில் மாற்றம் செய்யவில்லை. மாநில அரசுகள் வரியை உயர்த்தியபோதுதான் விலை உயர்ந்தது.  இதற்கிடையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 42 டாலரை தாண்டி விட்டது. இதன் எதிரொலியாக இந்திய எண்ணெய் நிறுவனங்களும் 83 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் உயர்த்தின. சென்னையில் நேற்று 2வது நாளாக பெட்ரோல் 53 காசு அதிகரித்து ₹76.60 ஆகவும், டீசல் 51 காசு உயர்த்தி ₹69.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. பிற நகரங்களை பொறுத்தவரை பெட்ரோல் நேற்று டெல்லியில் 60 காசு உயர்த்தி ₹72.46 ஆகவும், மும்பையில் 58 காசு உயர்த்தி ₹79.49ஆகவும், பெங்களூருவில் 61 காசு உயர்த்தி ₹74.79 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. டீசல், டெல்லியில் 60 காசு உயர்த்தி ₹70.59 ஆகவும், மும்பையில் 58 காசு உயர்த்தி ₹69.37 ஆகவும், பெங்களூருவில் 57 காசு உயர்த்தி ₹67.11 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

 சேலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு  53 பைசா உயர்ந்து, ₹76.96க்கும், டீசல் 52 பைசா உயர்ந்து, ₹69.63க்கும் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த  ஒரு வாரத்தில், பெட்ரோல், டீசல் விலை மேலும் ₹5 முதல் ₹7 வரை உயர  வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரலில் பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் 20 டாலராக குறைந்து விட்டது. இருப்பினும் அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை. கச்சா  எண்ணெய் குறைந்த போது விலையை குறைக்காமல், தற்போது ஊரடங்கால் மக்கள்  வருவாயை இழந்துள்ள நேரத்தில் விலையை உயர்த்தியது, வாகன ஓட்டிகளிடையே கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தினால், சரக்கு போக்குவரத்து  கட்டணங்களும் உயரும், இதன் எதிரொலியாக, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை அபாயம் உள்ளது.


Tags : Increase , gasoline, diesel prices, 60 cents per liter , second day
× RELATED 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார...