×

75 நாட்களுக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இன்று முதல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்

* சோதனைக்கு பிறகே உள்ளே செல்லலாம்
* இட்லி, பூரி விலை உயர்வு இல்லை
* ஓட்டல் சங்க தலைவர் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 75 நாட்களுக்கு பிறகு, இன்று முதல் ஓட்டல்களில் அமர்ந்து உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விலையை உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. நேற்று வரை சுமார் 75 தினங்கள் 80 சதவீத ஓட்டல்கள் இயங்கவில்லை. இயங்கிய சில ஓட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை.இந்த நிலையில் இன்று முதல் ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஓட்டல்களை முழுமையாக திறக்கும் பணியில் ஓட்டல் உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் நேற்று மும்முரமாக ஈடுபட்டனர். ஓட்டல்களை திறந்து சுத்தம் செய்வது, அரசு அறிவித்துள்ள அறிவுரைகளின்படி ஓட்டல்களை எவ்வாறு மாற்றுவது போன்ற பணியில் ஈடுபட்டனர். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் டேபிள்கள் மாற்றி அமைக்கப்பட்டன. கிருமி நாசினி மூலம் ஓட்டல்கள் தூய்மைப்படுத்தப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது: தமிழக அரசின் அறிவுரைப்படி ஓட்டல்களில் இன்று முதல் உட்கார்ந்து சாப்பிடலாம். ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று வாசலிலேயே தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து அவர்கள் கைகளை சுத்தம் செய்த பின்னரே சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள். முன்னர் ஒரு டேபிளில் 4 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். இனிமேல் ஒரு டேபிளில் 2 பேர் மட்டுமே உணவு அருந்தலாம். ஒரு டேபிளுக்கும் இன்னொரு டேபிளுக்கும் 1 மீட்டர் இடைவெளி இருக்கும். தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 75 சதவீத ஓட்டல்கள் தான் திறக்கப்படும். சென்னையை பொறுத்தவரை 25 சதவீதம் ஓட்டல்கள் மட்டுமே திறந்திருக்கும். பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சில ஓட்டல் உரிமையாளர்களும் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் தான் முழுமையாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு ஓட்டல்களின் உணவு பொருட்களின் விலையை உயர்த்தும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை. சானிடைசர், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களை வாங்க ஆகும் செலவை பார்த்து அதன் பிறகு விலை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும். அரசு அறிவித்துள்ள அனைத்து விதிகளையும் ஓட்டல் உரிமையாளர்கள் பின்பற்றுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : customers , After 75 days, customers ,cafeteria,eat
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...