×

கூடுவாஞ்சேரி அருகே சாலை தடுப்பில் பைக் மோதி வங்கி மேலாளர் பரிதாப பலி

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு மீது பைக் மோதி தனியார் வங்கி மேலாளர் பலியானார். கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம், வள்ளலார் நகர், அன்னை இந்திரா தெருவை சேர்ந்தவர் ராஜி (50). இவருக்கு மனைவி தேவகி (45), மகன்கள் ரவீந்தர் (27), ரஞ்சித் (25) ஆகியோர் உள்ளனர். இதில், ரஞ்சித் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு ரஞ்சித் நேற்றுமுன்தினம் இரவு 9:30 மணியளவில் பைக்கில் சென்று விட்டு வீடு திரும்பினார்.

அப்போது, கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை விரிவாக்க பணிக்காக சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது ரஞ்சித்தின் பைக் பயங்கரமாக மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரஞ்சித்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணி முடிந்தும் அகற்றாத தடுப்பு
கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை விரிவாக்க பணி பல கோடி ரூபாய் மதிப்பில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், காயரம்பேடு பகுதியில் தரைப்பாலம் அமைப்பதற்காக சாலையின் குறுக்கே தடுப்பு வைக்கப்பட்டது.  இதில், தரைப்பால பணி முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால், சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பிணை  நெடுஞ்சாலை துறையினர் இதுவரை அகற்றவில்லை. இதனால், இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் சாலையின் குறுக்கே தேவையில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு மீது மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகின என்று பொது மக்கள் கூறுகின்றனர்.


Tags : Bank manager ,road block ,Guduvancheri , Bank manager , road block, Guduvancheri killed
× RELATED கீரப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த...