காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மாற்று இடத்தில் மீன் விற்பனை தொடங்கியது

தண்டையார்பேட்டை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். இவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வருவதால் வைரஸ் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வாங்க காவல்துறை தடைவிதித்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் டிஜிபி திரிபாதி, மாநகர கமிஷனர் விஸ்வநாதன், மீன் வளத்துறை இயக்குனர் சமீர் ஆகியோர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு செய்து, நோய் தடுப்பு நடவடிக்கையாக சில்லறையாக மீன் விற்பனை செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர்.

அதன்படி, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே மாற்று இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 200 கடைகளில் நேற்று மீன் விற்பனை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்குவதற்காக வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர்.இங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து மீன்வாங்கி செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். அப்போது, முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் வந்தவர்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர். மாற்று இடத்தில் செயல்படும் மீன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று மீன் வாங்கும் வகையில், கடைகளின் முன்பு மரக்கட்டைகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வியாபாரிகளும் முகக்கவசம், கையுறை அணிந்து, சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்தனர்.

Related Stories:

>