×

குமரியில் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் கொரோனா சோதனையில் இருந்து தப்பும் நபர்கள்: சிபாரிசு அதிகாரிகளால் அபாயம்

நாகர்கோவில்: குமரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் சிபாரிசு காரணமாக பரிசோதனையில் இருந்து தப்பும் நபர்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனா கோர தாண்டவம் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது.  உலக அளவில் இந்தியா 5ம இடத்தை பிடித்துள்ளது.  தமிழகத்தில் சென்னையில்  அதி வேகமாக கொரோனா பரவுகிறது. இதனால்  சென்னையில் இருந்து அவசர, அவசரமாக வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இ பாஸ் மூலம் கார், பைக்குகள் மற்றும் ரயில்களில் சொந்த மாவட்டங்களை நோக்கி சென்னை வாசிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

குமரி மாவட்டத்துக்கும் சென்னையில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குவைத், அபுதாபி, சவூதி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் நபர்கள் ஆரல்வாய்மொழி, களியக்காவிளை சோதனை சாவடியில் சளி மாதிரி கொடுத்து விட்டு, பரிசோதனை முடிவு வரும் வரை லாட்ஜூகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  பரிசோதனை முடிவுக்கு பின், ஊருக்குள் அனுமதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பாதிப்பு உள்ளவர்கள் குமரி மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

நாள் ஒன்றுக்கு 2, 3 என்று இருந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரு நாட்களாக 5, 7 என மாறி உள்ளது. இனி வரும் நாட்களில் மெல்ல, மெல்ல உயர்ந்து, குமரி மாவட்டத்திலும் பாதிப்பு உச்ச கட்டத்தை எட்டும் நிலையை அடையலாம் என்ற பீதி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சோதனை சாவடிகளில் சில குடும்பத்தினர், அதிகாரிகளின் சிபாரிசு காரணமாக சோதனைக்கு உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்படுகிறார்கள். சென்னையில் இருந்து வரும் அனைவரும் கண்டிப்பாக சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அப்படி சோதனைக்கு உட்படுத்திய பின், அவர்களை தனிமைப்படுத்துதல் முகாமுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சோதனை முடிவுக்கு பின் தான் அவர்கள், வீடுகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சிலரே தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சிபாரிசுகளை செய்யும் நிலை உள்ளது. அவ்வாறு சிபாரிசு காரணமாக சிலர் சோதனை முடிந்ததும், பரிசோதனை முடிவுக்காக காத்திருக்காமல் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் சளி மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்படாமல், வெறும் உடல் வெப்ப சோதனையை மட்டும் முடித்துக் கொண்டு செல்கிறார்கள்.

சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்தும் வரும் நபர்களை கூட சிபாரிசு பெயரில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதை தடுக்கும் வகையில் சென்னை, மும்பை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். பரிசோதனை முடிவு வரும் வரை அவர்களை தனிமைப்படுத்துதல் முகாமிற்கு தான் அனுப்பி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குமரியில் 109 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 109 ஆக இருந்தது. நேற்று மட்டும் 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உதயமார்த்தாண்டத்தை சேர்ந்த 39 வயது போலீஸ்காரர், சென்னை திருவள்ளூரில் பணியில் உள்ளார். இவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து காரில் களியக்காவிளை வந்தார். கடந்த 4ம் தேதி இவரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் நேற்று தொற்று உறுதியானதை தொடர்ந்து, மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். ரீத்தாபுரம் இரும்பிலியை சேர்ந்த 8 வயது சிறுவன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பெற்றோருடன் சென்னையில் இருந்து கடந்த 29ம் தேதி பெற்றோருடன் காரில் வந்தான். 30ம்தேதி மாதிரி எடுக்கப்பட்டது. முதலில் நெகட்டிவ் என வந்தது. நேற்று மீண்டும் பரிசோதனை செய்ததில், சிறுவனுக்கு தொற்று உறுதியானது. பெங்களூரில் இருந்து வந்த கண்டன்விளையை சேர்ந்த இளம்பெண், சென்னையில் இருந்து வந்த காப்புக்காடு பகுதியை சேர்ந்த 43 வயது வாலிபர், அவரது மகன், மேலும் காப்புக்காட்டை சேர்ந்த 43 வயது உறவினர், உறவினரின் மனைவி 40 வயது பெண் உள்பட 7 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாதிப்பு எண்ணிக்கை 109 ஆகி உளளது. இவர்களில் 59 பேர் குணமடைந்தனர். 2 பேர் மரணம் அடைந்தனர். 2 பேர் திருவனந்தபுரத்தில் சிகிச்சையில் உள்ளனர். இது தவிர 46 பேர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

Tags : Survivors ,Kumari ,recommendation authorities ,corona test ,escapees , Kumari, corona test, escapees
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...