×

வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால் ‘ஆட்டம் காண்கிறதா’ கட்டுமானத் தொழில்?: பல லட்சம் வேலை காத்திருக்கிறது

மதுரை: வைரஸ் பரவல், ஊரடங்கால் வேலையிழந்த வடமாநில தொழிலாளர்கள், தமிழகத்தில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்கின்றனர். இதனால் இவர்களை நம்பி தமிழகத்தில் நடந்து வந்த பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. அதேசமயம், சிறு குறு தொழிற்சாலைகள், கட்டுமானம் மற்றும் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில், பணியாற்றி வந்த இவர்கள் வெளியேறி சென்றதால் பல லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகியிருக்கின்றன. இந்த அரிய வாய்ப்பை தமிழக இளைஞர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பரவி மக்களை முடக்கி வைத்துள்ளது. இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையிலும் உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கால், தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறமிருக்க, வேலையின்றி தமிழகத்தில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பல லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள், வாகனங்கள் மற்றும் நடந்தும் சென்று வருகின்றனர்.

ஊரடங்கு தளர்வால் பல தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், தொழிலாளர்கள் இல்லாமல் தமிழகத்தில் நடைபெறும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் உள்ளிட்ட கட்டுமானங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளியேறிய வடமாநிலத் தொழிலாளர்களுக்கு மாற்றாக, உள்ளூர் தொழிலாளர்களை நியமித்து பணிகளை துவக்க பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த முடிவு தேனாக இனித்தாலும், நம்மவர்கள் கூடுதல் உழைப்பு மற்றும் கிடைக்கும் ஊதியத்தை பெற்றுக்கொண்டு பணி செய்வார்களா என்ற கேள்வியும் பலமாகவே எழுந்துள்ளது.

‘ஸ்மார்ட் ஒர்க்’ பாதிக்கும்...
தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. மதுரையை பொறுத்தவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூ.1,012 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. குறிப்பாக, மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் அதிநவீன  பார்க்கிங் வசதியுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைகள், மீனாட்சி கோயில்  அருகே மல்டி லெவல் கார் பார்க்கிங், சித்திரை, மாசி வீதிகளில் பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் சேகரிப்பு திட்டம்,  பாதாள மின் வயர்கள், பழ மார்க்கெட் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் பழ மார்க்கெட் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்து விட்டன. மற்ற பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மேற்கண்ட பணிகள் மற்றும் நத்தம் பறக்கும் பாலம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது இவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்று விட்டனர். தமிழகம் முழுவதும் இதே நிலைதான். இதனால் ஏற்கனவே இழுபறியாக சென்றுக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், பணியாளர்கள் பற்றாக்குறையால், மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக கட்டுமான பொறியாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

வடமாநிலத்தவருக்கு வாய்ப்பு ஏன்?
தமிழகத்தில் கட்டுமானங்கள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களின் ஒப்பந்த பணிகள், டோல்கேட் மற்றும் குவாரி பணிகளில் வடமாநிலத்தவரே அதிகம் உள்ளனர். இவர்களுக்கு குறைந்த சம்பளம், சிறியதாக ஓய்வறை இருந்தால் போதுமாம். ஒரே அறையில் பல பேர் முண்டியடித்து தங்குவதும் உண்டு. நேரம் கணக்கிடாமல் குறிப்பிட்ட வேலை முடியும் வரை இருந்து முடித்து கொடுப்பார்களாம். மாதச்சம்பளமாக இருந்தால், வேலைக்கேற்ப ரூ.6 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும், தினசரி சம்பளமாக இருந்தால் அதிக பட்சம் ரூ.150 முதல் ரூ.400 வரையும் வழங்கப்படுகிறது. விடுமுறையும் கிடையாது. ஆனால், இதே பணிக்கு தமிழக தொழிலாளர்களுக்கு ஒன்றரை மடங்கு கூடுதலாக சம்பளம் தர வேண்டும். அத்தோடு குறைந்த நேரமே பணியாற்றுவார்கள் என ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

நம்ம பிரச்னை என்ன?
தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் நிலையில், பல லட்சம் வடமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பை தமிழகம் வழங்கி வருகிறது என்பது சற்றே யோசிக்க வைக்கிறது. தற்போது சொந்து ஊருக்கு பலரும் சென்றுள்ள நிலையில், நமக்கான வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள இதுவே சரியான தருணம். நம்மவர்கள் ஒருவருக்கான சம்பளத்தை வடநாட்டினர் இருவருக்கு கொடுக்கலாம் என்ற நிலையே தமிழக தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புக்கு முதலில் வேட்டு வைக்கிறது.

விருப்பத்தேர்வே தமிழகம்...
இந்தியாவில் மும்பை போன்ற பல வளர்ந்த மாநிலங்கள் இருந்தாலும், வடமாநிலத்தவர்களின் விருப்பத்திற்குரிய மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு வந்தால், எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. ஏனெனில் அவரவர் விருப்பப்படி, அவரவர் தகுதிக்கேற்ற வேலை தங்கு தடையின்றி கிடைக்கிறது. வேலை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லாவிட்டால், எந்தப் பொருட்களையும் வாங்கி ரோட்டோரத்தில் உட்கார்ந்தபடி விற்று வாழ்க்கையை நடத்திவிடலாம். விநாயகர் சதுர்த்திக்கான பிள்ளையார் சிலைகளை செய்து கொடுப்பதில் வடமாநிலத்தவரின் பங்கு பிரதானம்.

 செலவு குறைவு
கான்ட்ராக்டர் முருகானந்தம் கூறுகையில், ‘‘எங்களைப் போன்ற ஒப்பந்ததாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே பணியில் ஈடுபடுத்துகிறோம். வெளிமாநிலத்தவரை நாங்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால், பொதுவாக நமது தொழிலாளர்கள் மீது ஒப்பந்ததாரர்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. வடமாநிலத்தவரை பொறுத்தவரை நம்மவர்களை விட அதிக நேரம் வேலை செய்து, அவர்களை விட குறைவாக சம்பளமே வாங்குகின்றனர். கட்டுமான பணியில் ஒரு தமிழக கொத்தனாருக்கு ரூ.650 முதல் ரூ.700 வரை சம்பளம். இதே வேலைக்கு வடமாநிலத்தவருக்கு ரூ.300 முதல் ரூ.350 கொடுத்தால் போதும். காலை 8 மணிக்கு வந்தால் இரவு 8 மணி வரை கூட வேலை பார்ப்பார்கள். இதனால் ஒப்பந்ததாரருக்கு லாபம் கிடைப்பதால் வடமாநிலத்தவரை அதிகம் தேர்வு செய்கின்றனர்’’ என்றார்.

வாய்ப்பை விட்டுராதீங்க...
கொத்தனார் சித்தன் கூறுகையில், ‘‘ஒப்பந்த பணியை எடுத்துச் செய்வோரின் நம்பிக்கையை நமது தொழிலாளர்கள் இழந்து விட்டனர். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்பது ஏற்கும் வகையில் இருந்தாலும், அதற்கேற்ப உழைப்பை கொடுக்க நமது தொழிலாளர்கள் தயாரில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்க முடியாததால், அடுத்த ஒப்பந்தம் கிடைப்பதில் அவர்களுக்கு பெரும் சிரமம். பெரிய அளவிலான ஒப்பந்த பணியை எடுத்தவர்கள், வெளிமாநிலத்தவரை பயன்படுத்தினால், நம்மவர்களுக்கான சம்பளத்தில் பாதியில் பணி முடியும். குறிப்பிட்ட காலத்திற்குள் பணியையும் முடித்து விடுவார்கள். இதனாலேயே நமக்கான வாய்ப்புகளை வடமாநிலத்தவரிடம் பறி கொடுத்துள்ளோம். இதனால் பலர் வேலையின்றி தவிக்கின்றனர். கொரோனாவால் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நம்மவர்கள் சரியாக பயன்படுத்தி உழைக்க தயாராக வேண்டும்’’ என்றார்.

பணியில் 10 லட்சம் பேர்
ஐநா  சபையின் 2009ம் ஆண்டு அறிக்கையில், நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்தவர்களை  விட. சொந்த நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்களே அதிகம் என கூறியுள்ளது.  இதில், ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் கிராமத்தில் இருந்து   நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்ந்தோரே அதிகம் என கூறியுள்ளது. 2011ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 120 கோடி மக்கள் தொகையை கொண்ட  இந்தியாவில், ஆண்டுக்கு 30 கோடி பேர் நாட்டுக்குள்ளேயே வெவ்வேறு பகுதிக்கு  புலம் பெயர்வதாக தெரியவந்துள்ளது. தற்போது வடஇந்தியர்கள் அதிகளவில்  தமிழகத்திற்கு இடம் பெயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 10  லட்சத்திற்கும் அதிகமான வடமாநிலத்தவர் வசிப்பது தெரியவந்துள்ளது. இதில், உற்பத்தி  துறையில் 27 சதவீதத்தினரும், ஜவுளித்துறையில் 14 சதவீதத்தினரும், 12  சதவீதத்தினர் கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தஞ்சம் அடைவது யார்? யார்?
மேற்கு  வங்கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், அசாம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற  மாநிலங்களில் இருந்தே அதிகமானோர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதில்,  24.4 சதவீத பீகாரிகளும், 14.4 சதவீதத்தினர் உத்தரபிரதேசத்தை  சேர்ந்தவர்களும், 12.3 சதவீதத்தினர் ஒடிசாவைச் சேர்ந்தவர்களும், 12  சதவீதத்தினர் அசாமைச் சேர்ந்தவர்களும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்  சுமார் 10 சதவீதத்தினரும் இருக்கின்றனர். இவர்களில் 41 சதவீதத்தினர் பிளஸ் 2  வரை படித்துள்ளதும், 16 சதவீதத்தினர் 10ம் வகுப்பு வரை படித்தவர்கள்  என்பதும், பெரும்பாலோனார் போதிய கல்வியறிவு பெறாதவர்கள் என்பதும்  தெரிகிறது.

உள்ளூர் இளைஞர்களுக்கு இருக்கு வேலைவாய்ப்பு
மதுரை கப்பலூர் சிட்கோ தலைவர் ரகுநாதராஜா கூறியதாவது: தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையில் பணிபுரிகின்றனர். கடுமையான கட்டுமான பணிகளை எந்தவித தயக்கமுமின்றி எளிதாக செய்து முடிக்கின்றனர். குறைவாக கூலி கொடுத்தால் ோதும்.வடமாநிலங்களில் வேலைவாய்ப்புகள் குறைவு. ஜனத்தொகை அதிகம்.  ஒரு குடும்பத்தில் நான்கு, ஐந்து எனஇளைஞர்கள் இருப்பதால், தங்களது வாழ்வாதாரத்திற்காக அவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களை நாடி வருகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வடமாநில தொழிலாளர்கள் பலரும் சொந்த மாநிலத்திற்கு சென்றுவரும் நிலையில், உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என விரும்புகிறோம்.

வேலைக்கு ஏற்ற ஊதியம் என்ற நிலைபாட்டில் இருந்தாலும் கடினமான வேலைக்கு யாரும் வருவதில்லை. இதனால் மீண்டும் வடமாநில தொழிலாளர்களைத்தான் தேட வேண்டியுள்ளது. ஆனால் அவர்களும் நிரந்தரமாக இங்கு தங்குவதில்லை. 2, 3 ஆண்டுகளில் திரும்பி சென்று விடுகின்றனர். தற்போது கொரோனாவால் தங்களது சொந்த மாநிலத்திற்கு வடமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்றுள்ளனர். இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Northern Industry Workers ,North Construction Workers , North Construction, Workers , Moving ,Home
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...