×

ஊரடங்கு தளர்வு எதிரொலி விழுப்புரம்- புதுவை இடையே நாளை ரயில், பஸ் சேவை தொடங்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

விழுப்புரம்:  ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் புதுச்சேரி - விழுப்புரம் இடையே பேருந்து, ரயில் சேவை தொடங்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ரயில், பேருந்து, விமானம் என அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல் இறப்பு, திருமணம், மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு பொதுமக்கள் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு கடந்த 1ம்தேதி முதல் தமிழகத்தில் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசு பேருந்துகளும், முக்கியவழித்தடங்களில் விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, நாளை (8ம் தேதி) முதல் மேலும் சில தளர்வுகள் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வழிபாட்டுத்தலங்கள், ஷாப்பிங் மால் திறப்பு உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தின் அருகாமையில் உள்ள புதுச்சேரிக்கு அரசு பேருந்து, ரயில் சேவை தொடங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம், கடலூரிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு தொடர்பாக சென்று வருகின்றனர்.

தற்போது, ஊரடங்கு காரணமாக பேருந்து, ரயில் சேவைகள் இல்லாததால் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, நாளை (8ம் தேதி) முதல் விழுப்புரம், கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு அரசுப்பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும், விழுப்புரத்திலிருந்து யூனிட் ரயில் இயக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் இப்பேருந்து சேவையை இயக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு கடந்த 1ம்தேதி முதல் தமிழகத்தில் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

Tags : Villupuram ,Puduvai Rail ,Puthuvai , Rail,bus service,launched , Villupuram and Puthuvai
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...