ஆன்டிகுவா: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து முன்னணி வீரர்கள் ஹெட்மயர், டேரன் பிராவோ, கீமோ பால் ஆகியோர் விலகியுள்ளனர். அந்த முடிவை எடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதனை நாம் மதிக்க வேண்டும்... என்று முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்கள் இயான் பிஷப், மைக்கேல் ஹோல்டிங் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பீதிக்கு பிறகு முதல் கிரிக்கெட் போட்டித் தொடராக இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ‘விஸ்டன் கோப்பை’ டெஸ்ட் போட்டித் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற உள்ளன.
இங்கிலாந்து அழைப்பை ஏற்று, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெ.இண்டீஸ் அணி வீரர்களின் பட்டியலும், போட்டி அட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதலில் டேரன் பிராவோ, ஹெட்மயர், கீமோ பால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கொரோனா தொற்று அச்சுறுத்தல் தொடரும் நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மூவரும் மறுத்து விட்டதால், அவர்களுக்கு பதில் வேறு வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து முன்னாள் பந்து வீச்சாளர் இயன் பிஷப், ‘அணியின் முக்கியமான வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தவிர்த்துள்ளது துரதிர்ஷ்டவசமானது.
திறமையான வீரர்களை சக வீரர்களும் கட்டாயம் தவற விடுவார்கள். ஆனால் உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தி வரும் நிலையில் அவர்களை இங்கிலாந்து சென்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. போவதா வேண்டமா என்ற முடிவை வீரர்கள்தான் எடுக்க முடியும். முக்கியமாக அவர்களது முடிவை மதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். அதேபோல் மற்றொரு முன்னாள் பந்து வீச்சாளரான ஹோல்டிங்கும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
வெற்றியும்...ஊதியமும்...
கடந்த ஆண்டு இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோ, ஹெட்மயர், கீமோ பால் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா பக்கவிளைவாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக வெ.இண்டீஸ் அணி வீரர்களுக்கு ஜூலை மாதம் முதல் 50 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஆனால், இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் வெ.இண்டீஸ் வீரர்களுக்கு முழு ஊதியமும் வழங்கப்பட உள்ளது
தனிமையும்... பயிற்சியும்...
வெஸ்ட் இண்டீசில் இருந்து நாளை மறுதினம் புறப்படும் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அணி அதே நாள் இங்கிலாந்து போய் சேருகிறது. ஓல்டு டிரபோர்டில் வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் பயிற்சி செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து மருத்துவ சோதனை நடைமுறைகளுக்கு பிறகு ஜூலை முதல் வாரத்தில் சவுத்தாம்டன் அழைத்துச் செல்லப்படுவர். அங்கு ஜூலை 8ம்தேதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள். அடுத்து 2வது, 3வது டெஸ்ட் போட்டிகள் ஜூலை 16, 24ம் தேதிகளில் மான்செஸ்டரில் தொடங்கும்.