×

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சவாலாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தடுப்பு பணிகள் சவாலாக உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.  செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ துறை, சுகாதார துறை அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். இதில் கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, எஸ்பி கண்ணன், டீன் சாந்திமலர், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர்  கலந்துகொண்டனர். பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. சென்னைக்கு மிக  அருகில் புறநகர் பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதனால், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. நோய் தொற்று அதிகரிப்பை தடுப்பது  மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 1600 ஐ கடந்துள்ளது.

செங்கல்பட்டில் 230க்கும் மேற்பட்ட கொரோனா அறிகுறியுடன், அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான மருத்துவம் வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்பில் 2 கேர் சென்டர்கள் அமைக்கப்பட்டு, நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 50க்கும் குறைவானோர், மருத்துவர்களின் ஆலோசனையின் படியும், நோயாளிகளின் விருப்பத்தின் பேரிலும் வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகின்றனர். செங்கல்பட்டு மருத்துவமனையில், கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்ட 35 கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவம் அளித்து, குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.  37குழந்தைகளுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 8 டயாலிசிஸ் நோயாளிகளுக்கும் மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், ஒருவருக்கு கூட நோய் தொற்று ஏற்படவில்லை. மாவட்ட நிர்வாகம் கூறும் அறிவுரைகளை  கேட்டு நோய் தொற்றை தடுக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Tags : Chengalpattu ,district ,Minister Vijayabaskar ,Vijayabaskar , Coronation prevention, Chengalpattu district,challenging,Minister Vijayabaskar
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...