அலிபாக்கில் கரை கடந்த நிசர்கா புயல் திசை மாறியதால் மும்பை மாநகரம் தப்பியது: ராய்கட் மாவட்டத்தில் அதிக பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் அருகே நேற்று கரை கடந்த நிசர்கா புயல் திசை மாறியதால் மும்பை மற்றும் மும்பை பெருநகரப் பிராந்தியப் பகுதிகள் பேராபத்தில் இருந்து தப்பின. எனினும் மும்பை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நகரிலும் புறநகர் பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன. புயலின் போது அலிபாக்கில் மின்கம்பம் விழுந்து ஒருவர் பலியானார். இதுதவிர வேறு எந்த பகுதியிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

 இந்த புயல் மும்பை மற்றும் மும்பை பெருநகர பிராந்தியத்துக்கு உட்பட்ட தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்கள், கொங்கன் பிராந்தியத்தில் உள்ள சிந்துதுர்க், ரத்னகிரி ஆகிய மாவட்டங்களில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதனால், மும்பை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் போலீசார் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மும்பையில் கடற்படையினரும் மீட்பு பணிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த நிசர்கா புயல் அலிபாக்கை நோக்கி நகரத் தொடங்கியதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதல் மும்பை பெருநகரப் பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யத் தொடங்கியது.

இந்த நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அலிபாக்கை நெருங்கிய நிசர்கா புயல் சுமார் மூன்றரை மணிநேரம் அந்த மாவட்டத்தின் பல பகுதிகளை சூறையாடியது. ராய்கட் மாவட்டத்தில் அலிபாக், முருட், ஸ்ரீவர்தன், மஹாட், மான்காவ், பொல்தாபூர், பென் ஆகிய 7 தாலுகாக்களில் நிசர்கா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தாலுகாக்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அலிபாக்கில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். புயலின் போது ராய்கட் மாவட்டத்தில் உள்ள பல வீடுகளின் கூரைகள் பெயர்ந்து பல அடி தூரத்துக்கு வீசப்பட்டன. சில வாகனங்களும் புயல் காற்றில் கவிழ்ந்து சேதமடைந்தன. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்ததில் ஏராளமான கார், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

சுமார் மூன்றரை மணிநேரம் ராய்கட் மாவட்டத்தின் 7 தாலுகாக்களை பதம்பார்த்த நிசர்கா புயல், வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புக்கு மாறாக அலிபாக் கடல் பகுதியில் இருந்து தெற்கு திசை நோக்கி நகர்ந்து சென்றது.  இதனால் மும்பை மற்றும் மும்பை பெருநகர பிராந்தியத்தில் உள்ள தானே, பால்கர் மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகள் புயல் பேராபத்தில் இருந்து தப்பின. எனினும் மும்பை மற்றும் சுற்றுவட்டாரத்தின் சில பகுதிகளில் சூறைக்காற்றுடன் நல்ல மழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

மத்திய மும்பையில் உள்ள காலா சவுக்கி, பரேல், பைகுலா, லால்பாக் போன்ற இடங்களிலும் மாட்டுங்கா லேபர் கேம்பிலும் மரங்கள் விழுந்து வாகனங்கள் சேதமடைந்தன. மலாடில் மரம் விழுந்து இரண்டு பேர் காயமடைந்தனர். தானே, பால்கர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. எனினும் இந்த மாவட்டங்களில் நிசர்கா புயல் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.

சேதம் எவ்வளவு?

மகாராஷ்டிரா அமைச்சர் உதய் சாமந்த் கூறுகையில், ‘‘நிசர்கா புயலால் ராய்கட் மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிந்துதுர்க், ரத்னகிரி மாவட்டங்களில் சூறாவளிக் காற்று காரணமாக ஏராளமான மரங்கள் விழுந்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் சிலர் காயமடைந்துள்ளனர். அலிபாக்கில் ஒருவர் பலியாகியுள்ளார். புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து அடுத்த 2 நாட்களில் ஆய்வு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’’ என்றார்.

Related Stories:

More
>