×

தமிழகத்தில் 3 மாத காலத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்!

சென்னை: தமிழகத்தில் வாடகைதாரர்களிடம் 3 மாத காலத்திற்கு வாடகை கட்டணத்தை வீட்டின் உரிமையாளர்கள் வசூலிக்க கூடாது என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அறிவித்தது. இதுநாள்வரை, அந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்கிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு, குடியிருப்பு வாசிகளிடம் இருந்து நிலம், வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மார்ச் 29ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றி தமிழக அரசும் பேரிடர் மேலாண்மை சட்டம், அவசர கால, பெருந்தொற்று நோய் தடுப்பு அவசரகால சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. இதுபற்றி பொதுமக்கள் அறியும் வண்ணம் விரிவாக எடுத்துச் சொல்லவில்லை. இந்த அரசாணை வெளியிட்ட சமயத்தில் 15 நாட்கள் வரைதான் ஊரடங்கு அமலில் இருந்தது.

ஆனால், கொரோனா ஊரடங்கு 60 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகையை கூட வசூல் செய்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி, தொழில், வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதனை கருத்தில் கொண்டு 3 மாதத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என்று வீட்டின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : High Court ,Tamil Nadu , Tamil Nadu, Home Rentals, Madras High Court, Government of Tamil Nadu
× RELATED போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும்...