×

கொரோனா ஊரடங்கால் திருமங்கலம் பகுதியில் கடற்பாசி தொழில் கடும் பாதிப்பு: பல லட்சம் ரூபாய் நஷ்டமென உரிமையாளர்கள் கவலை

திருமங்கலம்:  கொரோனா ஊரடங்கினால் திருமங்கலம் அருகே கடற்பாசி தொழிற்சாலைகளில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கிழவனேரி உட்பட சுற்றுவட்டார கிராமங்களில், கடற்பாசியிலிருந்து உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு மட்டும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த ஆலைக்காக ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி, ராமேஸ்வரம், தொண்டி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடற்பாசிகளை விலைக்கு வாங்கி அதிலிருந்து உணவு பொருட்களை தயாரிக்கின்றனர். தொழிற்சாலையில் கடற்பாசிகளை இயந்திரங்கள் மூலமாக சூடாக்கி, நீரினை வெளியேற்றி தட்டுகளில் அடுக்கி வைப்பார்கள். பின்னர் வெயிலில் பாசிகளை உலர வைத்து அவற்றை ஒன்றாக அடுக்கி மீண்டும் குளிர்சாதன அறையில் வைத்து பக்குவம் செய்கின்றனர். பின்னர் அங்கிருந்து வெளியே எடுத்து கடற்பாசியின் நிறத்தை மாற்றி தூய்மைப்படுத்தி உணவுப்பொருட்களாக நெல்லை, ஈரோடு, மதுரை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

சந்தையில் நல்ல விலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு இந்த தொழிலையும் புரட்டி போட்டு விட்டது. கடந்த 2 மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அரசு அறிவித்த தளர்வுகளை தொடர்ந்து கடந்த சில தினங்களாக கிழவனேரியில் கடற்பாசி தொழிற்சாலை மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது. இருப்பினும், கடந்த 2 மாதங்களாக தொழிற்சாலை இயங்காததால் பல லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கிழவனேரி ஆலை உரிமையாளரான திருமங்கலத்தை சேர்ந்த பெருமாள் கூறுகையில், ‘‘கடற்பாசி நல்ல உணவுப்பொருளாகும். பாலுடன் சேர்த்து அருந்தினால் நல்லது. கொரோனா காரணமாக 2 மாதங்களுக்கு பின், மீண்டும் தொழிற்சாலையை திறந்துள்ளோம். ஆனால் தொடர்ந்து ஆலை இயங்காததால் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன.

இதனை சரிபடுத்த கூடுதல் செலவு ஆகும். கொரோனா பாதிப்பால் பொது போக்குவரத்திற்கு தடையுள்ளதால் மும்பை, கோல்கத்தா மற்றும் பல இடங்களுக்கு சரக்குகளை அனுப்ப இயலவில்லை. இரண்டு மாத ஊரடங்கினால் இதுவரையில் ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள ஆலைகளிலும் பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் நலனை கருதி தற்போது மீண்டும் ஆலைகளை திறந்துள்ளோம். இருப்பினும் இயந்திர பழுது, கடற்பாசியை இறக்குமதி செய்வதில் கூடுதல் விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க வேண்டியுள்ளது. எனவே அரசு இந்த தொழிலுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : Corona , Thousands of millions ,rupees lost due,sea sponge industry
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...