×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த பஸ்நிலைய வியாபாரிகள்: மானிய கடன் வழங்க எதிர்பார்ப்பு

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராயபாளையம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி நகராட்சி, சங்கராபுரம், தியாகதுருகம் போன்ற ஊர்களில் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பஸ் நிலையங்கள், வணிக வளாகங்களில் கடைகள் கட்டி மக்கள் நலனுக்காக வாடகைக்கு விட்டுள்ளனர். அதுவும் கச்சிராயபாளையம் பஸ் நிலையத்தில் தாட்கோ மூலம் 15 கடைகளும், பேரூராட்சி மூலம் 10 கடைகளும், சின்னசேலம் பஸ்நிலையத்தில் 30 கடைகளும், வணிக வளாகத்தில் 20 கடைகளும் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். பஸ்நிலையங்களில் பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள், படித்துவிட்டு வேலையில்லாத பட்டதாரிகள், பூ, பூமாலை கட்டி விற்றல், ஜெராக்ஸ் கடை, கணினி பயிற்சி மையம், துணிக்கடை, டீக்கடை போன்றவற்றை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த பஸ்நிலையம் மற்றும் வணிக வளாக கடைகளை வாடகைக்கு எடுக்க ஏழை, எளிய மக்களால், படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களால் டெபாசிட் கட்ட முடியாது. அதனால் செல்வாக்குள்ளவர்கள் கடை எடுத்து பின் அதிக வாடகைக்கு விடுவார்கள். இதுதான் ஒருசில இடங்களில் நடைமுறையாக உள்ளது.

கச்சிராயபாளையம் பஸ்நிலையத்தில்கூட ஏழை, எளிய ஆதிதிராவிட மக்கள் வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்ள வேண்டி தாட்கோ மூலம் கட்டி விடப்பட்டுள்ள கடைகளை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நபரே தன் பெயரில் வைத்துக்கொண்டு, அதிக வாடகைக்கு மற்றவர்களிடம் விட்டுள்ளார். இப்படி பஸ் நிலையம் மற்றும் வணிக வளாக கடைகளில் வியாபாரம் செய்து பிழைப்பவர்கள் அதிக வாடகை ஒரு புறம், போதிய அளவில் பொருளாதாரம் இல்லாததால் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய முடியாமலும், மாதாந்திர கடன் தொகையை கட்ட முடியாமலும் தள்ளாட்டத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதியில் இருந்து தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டதால் சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. கடைகள் திறந்திருந்தால் லாபம் பார்க்க முடியாவிட்டாலும், அன்றாட உணவுக்காவது வழிவகை இருந்திருக்கும். கடை திறக்கவும் தடை விதிக்கப்பட்டதால் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மூடி இருந்த கடைகளுக்கு கடந்த 2 மாத வாடகை கட்டமுடியாமல் வியாபாரிகள் திண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வியாபாரத்திற்காக வாங்கிய கடனில் மாதாந்திர தவணை தொகையை கட்ட முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். தமிழக அரசும் இந்த நலிவடைந்த பஸ்நிலைய வியாபாரிகளுக்கு எந்தவித உதவியும், நிவாரணமும் வழங்கவில்லை. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு அறிவித்து கடைகள் திறந்தபோதிலும் கிராம மக்கள் நகர்புறத்திற்கு வந்தால்தான். குறிப்பாக அரசு, மினி பேருந்து வசதி இருந்தால்தான் பஸ்நிலைய கடைகளில் வியாபாரம் இருக்கும். தற்போது கடைகளில் வியாபாரம் டல் அடிக்கிறது. இந்த ஊரடங்கு பல தொழிலதிபர்கள் முதல் சிறு வியாபாரிகள் வரை யாரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் பாதித்து விட்டாலும், சிறு வியாபாரிகள், ஏழை, எளிய மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அரசு இவர்களை கணக்கெடுத்து நிவாரண உதவி, மானிய கடன் வசதி செய்துதர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கடை வாடகையை ரத்து செய்ய வேண்டும்
கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் சிறு சிறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டு, வியாபாரம் இல்லாததால் கடையையே நம்பி இருந்த வியாபாரிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டனர். அதனால் இவர்கள் மீண்டும் வியாபாரம் செய்திட, பிழைப்பு நடத்திட மானியத்துடன் கூடிய வங்கி கடன் வசதி பெற்றுத்தர அரசு முன்வர வேண்டும்.
அதைப்போல வியாபாரம் இல்லாமல் கடை மூடியே இருந்ததால் கடை வாடகை கூட கந்து வட்டிக்கு வாங்கி கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் நகராட்சி கடைகளுக்கான வாடகையை கொரோனா காலத்தில் வசூலிப்பதை கைவிட்டு ரத்து செய்ய வேண்டும் என்றும் வியாபாரிகள் அரசை கேட்டுக்கொள்கின்றனர்.


Tags : merchants ,district ,Kallakurichi ,BUSINESSES ,KALLAKURUCHI DISTRICT ,BUILDING , BUSINESSES,LOST BUILDING PURPOSES ,KALLAKURUCHI DISTRICT,EXPECTATION ,CONSUMER LOAN
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...