×

குளிர்ந்தது காஞ்சிபுரம் இடி மின்னலுடன் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த 2 மாதத்துக்கு மேலாக வெயில் கொளுத்தியது. குறிப்பாக கோடையில் வெயில் உக்கிரமாக இருக்கும். அக்னி நட்சத்திக் காலம் மே 4ம் தேதி முதல் மே 28ம் தேதிவரை பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாதபடி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஏற்கனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.  பகலில் கொளுத்திய வெயிலால், இரவு நேரங்களில் புழுக்கம் ஏற்பட்டு, மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

மாலை சுமார் 4 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டம் சூழ்ந்தது. தொடர்ந்து பலத்த இடி, மின்னலுடன் மழை கொட்ட தொடங்கியது. இதனால் காஞ்சிபுரத்தில் மூங்கில் மண்டபம், கங்கைகொண்டான் மண்டபம், ரங்கசாமி குளம், கீரை மண்டபம் உள்பட பல பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. கோடை தொடங்குவதற்கு முன்பாகவே கடுமையான வெயிலின் உக்கிரத்தால் தவித்த காஞ்சிபுரம் மக்களுக்கு திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அளித்தது. இதேபோன்று, பாலுசெட்டிசத்திரம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், அய்யங்கார்குளம் ஆகிய பகுதிகளிலும் பெய்த இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நீர் நிலைகளில் தண்ணீர் சேரும் என எதிர் பார்க்கின்றனர்.

Tags : Kanchipuram ,thunderstorms , Cold, heavy rain, Kanchipuram thunderstorms,Public happiness
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...